"வேறு ஜாதி + 2 குழந்தைக்கு தாய்".. அவள் தான் வேண்டும்னு பிடிவாதம் பிடித்த மகனின் கதையை முடித்த தாய்
பெங்களூர்: அவருக்கு வயது 33.. வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை. தன்னுடைய வயதை சேர்ந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டதே.. தன்னை விட வயது குறைந்த பசங்களுக்கும் திருமணம் ஆகிறதே என்ற வருத்தத்தில் இருந்த அந்த இளைஞன் மனதிலும் திடீரென காதல் மலர்ந்தது.
காதலுக்கு ஜாதி, மதம் தெரியாது என சொல்வார்கள். அதேபோல் தான் அந்த இளைஞரும் மாற்று ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளின் தாயாராக இருந்தார். இந்த காதலே தற்போது இளைஞரின் உயிரை பறித்துள்ளது. இளைஞருக்கு பெற்ற தாயே எமனானது எப்படி? என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

துமகூரு மாவட்டம் ஜக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவம்மா (வயது 55). இவரது மகன் பெயர் முத்துராஜ் (33). இவர் பெங்களூர் மத்திகெரே எனும் இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அங்கேயே தங்கியும் இருந்தார்.
முத்துராஜ் வாரம் ஒருமுறை தனது விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு சென்று வருவார். அந்த சமயத்திலும் கூட 'கேட்டரிங்' பணிக்கு செல்வார்.
இந்நிலையில் தான் கடந்த 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை தினம் என்பதால் முத்துராஜ் ஜக்கேனஹள்ளி கிராமத்தில் இருந்தார். அன்றைய தினம் இரவில் வீட்டுக்கு வெளியே கட்டில் போட்டு தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நீண்டநேரம் ஆனபோதிலும் கூட முத்துராஜ் கண்விழிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அவரை எழுப்ப சென்றார். அப்போது கட்டில் முழுவதும் ரத்தமாக கிடந்தது. முத்துராஜ் இறந்து கிடந்தார். இதனை பார்த்த சகோதரி கதறி அழுதார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து முத்துராஜ் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் முத்துராஜ் தாய் சிவம்மா, சகோதரிடம் விசாரித்தனர். இருவரும் கொலை செய்யவில்லை என்று கூறி கதறி அழுதனர். ஆனால் தாய் சிவம்மாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தான் முத்துராஜை அவரது தாய் சிவம்மாவே உருட்டு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். சிவம்மா தனது மகன் முத்துராஜை கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறியதாவது:
''மகன் முத்துராஜ்க்கும், திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த பெண்ணுக்கு 2 குந்தைகள் உள்ளனர். இருப்பினும் முத்துராஜ், அவரை காதலிக்க தொடங்கினார். 2 குழந்தைகளின் தாயான அந்த பெண்ணை திருமணம் செய்யவும் விரும்பினார்.
இதுபற்றி தாய் சிவம்மாவிடம் கூறினார். சிவம்மா ஒப்புக்கொள்ளவில்லை. திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதோடு, வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனால் முத்துராஜ் கேட்கவில்லை. திருமணம் செய்தால் அந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவம்மா ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்த மகன் முத்துராஜை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்'' என போலீசார் தெரிவித்தனர். சிவம்மாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
