அரசியல் சரிபடாது போல.. பதவி கொடுக்காத தவெக தலைமை.. யாஷிகாவுடன் சினிமாவில் நடிக்கும் மதுரை சரவணன்!
மதுரை: அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மதுரை டாக்டர் சரவணனுக்கு இதுவரை அக்கட்சியில் எந்த பதவியும் அளிக்கப்படவில்லை. இதனால் தவெகவில் ஆர்வமாக செயல்பட டாக்டர் சரவணன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீண்டும் சினிமா பக்கம் டாக்டர் சரவணன் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளுக்கு சென்றவர்கள் பட்டியலில் முதன்மையாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன். ஏனென்றால் தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, திமுக, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக சார்பாக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் தோல்வி அடைந்தார்.

அதிமுகவில் அவர் மாவட்டச் செயலாளர் பதவி எதிர்பார்த்தார். ஆனால் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோரை கடந்து டாக்டர் சரவணனுக்கு பதவி கிடைக்கவில்லை. இதே பிரச்சனை காரணமாக தான் திமுகவில் இருந்தும் டாக்டர் சரவணன் விலகினார். பாஜகவில் இருந்த போது அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பை வீசியதால், அக்கட்சியில் இருந்து விலகினார்.
தற்போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினார். ஆனால் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை இருக்கும் போது, தவெக தலைமை டாக்டர் சரவணனை வளர அனுமதிக்க வாய்ப்பே இல்லை. மதுரை மாவட்டத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களில் அமைச்சர் ஆனந்த் அதிகம் நம்பும் நிர்வாகி கல்லாணை தான்.
மறுபக்கம் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருடனும் டாக்டர் சரவணனால் நெருக்கம் காட்ட முடியவில்லை. தவெக தலைமையிடம் பதவி கேட்ட போதும் கூட சரவணனுக்கு இதுவரை எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இதனால் டாக்டர் சரவணன் தனது பழைய பாணியில் சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே அவர் அகிலன், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், சரித்திரம் பேசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அகிலன் படத்திற்கு பின்னர் தான் அரசியலில் கால் பதித்தார். தற்போது செல்வா என்பவரின் இயக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்துடன் இணைந்து சரவணன் நடித்து வருகிறார். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
