நெட்பிளிக்சில் விஜய் தேரவகொண்டாவின் ரணபலி.. படம் எப்படி இருக்கிறது?
சென்னை: ராகுல் சங்ருதியான் இயக்கத்தில், விஜய் தேரவகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் டப்பிங்குடன் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ளது ரணபலி திரைப்படம். 1870களில் ராயலசீமா பகுதியில் ஏற்பட்ட பஞ்சம், பிரிட்டீஷ் அடக்குமுறை போன்றவற்றை மையமாக கொண்டு வெளியாகியுள்ள படம் இது.
அக்டோபர் 16ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நவம்பர் 13ம் தேதி முதல் நெட்ப்ளிக்சிலும் காணக் கிடைக்கிறது. ரணபலி பார்க்கத்தக்க படம்தானா.. அதையும் பார்த்துவிடுவோம் வாங்க.

படத்தின் ஆரம்பத்திலேயே, செத்து பிழைக்கிறது ஒரு குழந்தை. 24 வயது வரைதான் அந்த குழந்தை வாழும் என காப்பாற்றிய கடவுளின் அவதாரம் தெரிவிக்க அதுதான் ஹீரோ என்பது அப்போதே புரிந்துவிடுகிறது நமக்கு. ஆனால் அந்த வார்த்தை மண்டைக்குள் ஓடியபடியே இருக்க ஹீரோவும் வாலிபராகிறார். பஞ்சத்தில் அடிபட்ட மக்களை கொடுமைப்படுத்தி தானியங்களை லண்டனுக்கு ஏற்றுமதி செய்யும் பிரிட்டீஷ் கொடுங்கோலர்களை எதிர்த்தபடி, மக்களின் பசி தீர்க்க பல வகையான நடவடிக்கைகளை எடுக்கிறார் ரணபலி.
பஞ்சத்தில் அடிபட்ட மக்களை முகாம்களுக்கு கூட்டி வந்து கால் வயிற்றுக்கு மட்டும் சோறுபோட்டு ரயில் தண்டவாளங்களை போட வைக்கும் இரக்கமற்ற சர் தியோடர் ஹெக்டர் கேரக்டரில் நடித்துள்ளார் ஆஜானபாகுவான அர்னால்டு ஓஸ்லோ. அவர் திரையில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பார்ப்போருக்கு மனது பரபரக்கிறது. "நாம சோறு போட்டோம், தண்டவாளம் போட்டோம் என்றுதான் வருங்கால தலைமுறை நம்மை புகழும், ஆனா, தண்டவாளம் போட்டதே தானியங்களை மெட்ராஸ் துறைமுகத்திற்கு கொண்டுவரத்தான் என்பது அவர்களுக்கு புரியவா போகிறது" என்று அவர் பேசும் வசனம் ஆணியடித்தாற்போல உள்ளது.
பிரிட்டீஷ் படைகள் கிராமங்களுக்கு வரும் காட்சிகளின்போதெல்லாம், நேதாஜியும், காந்தியும், நமது நாட்டு வீரமிக்க ராஜாக்களும், தேசப்பற்றுள்ள பாளையக்காரர்களும் இல்லைன்னா நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும் என்ற கேள்வி நமது மனதில் எதிரொலிக்கிறது. அத்தனை கொடூரங்களை ரத்தமும் சதையுமாக காட்டியுள்ளது படம்.
பருக்கை சோறை கீழே கிடந்து எடுத்த குழந்தைகள் காதை வெட்டி தொங்க விடுவது, நீங்கள் எப்படி சோறு சாப்பிடலாம் என மூத்திரம் பெய்வது, அந்த சோறை சாப்பிட மறுத்த குழந்தையை கொதிக்கும் சோற்று அண்டாக்குள் போட்டது என, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை மறந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரியும் இக்கால தலைமுறைக்கு அப்பட்டமாக உண்மையை உள்ளங்கைக்குள் கொண்டுவந்து நினைவூட்டியுள்ளது திரைப்படம்.
கடைசி அரை மணி நேரம் லாஜிக் இல்லாத காட்சிகளும், மசலாக்களும் அதிகம் இருந்தாலும் வரலாற்று படத்தை அதுவரை "ரா"வாக காட்டியதற்காக அவற்றை மன்னிக்கலாம்.
தெலுங்கு இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். காந்தாரா என்ற படம் ஒரு குறிஞ்சிப்பூ. அதன் கிளைமேக்ஸ்சை பார்த்து புல்லரித்துப்போய் ரீகிரியேட் செய்கிறேன் பேர்வழி என எதையாவது செய்யாதீர்கள்.
காந்தாரா இயக்குநர் அந்த கலாச்சார மண்ணின் மகன். அவருக்கு அந்த சாமியாட்ட உணர்வை கடத்துவது சிறப்பாக வந்தது. புஷ்பா, ரணபலி என தெலுங்கு படங்களிலும் இப்போது வரும் சில தமிழ் படங்களிலும் சாமியாட்டத்தை காண்பிக்க முயற்சி செய்துள்ளீர்கள். ஆனால் ரணபலியில் அந்த காட்சி புஷ்பா அளவுக்கு வரவில்லை. மற்றபடி, வன்முறைகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளை தவிர்த்துவிட்டு பார்க்க வேண்டிய படம்.



Click it and Unblock the Notifications
