திமுக சார்பாக பெருந்துறை தொகுதியில் களமிறங்கும் சத்யராஜ் மகள் திவ்யா? ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. முன்னாள் அமைச்சர் முத்துசாமி அங்கு போட்டியிடலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென திவ்யா சத்யராஜ் பெயர் அடிபடுவது உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்ததாக திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் தவெக வேட்பாளராக ஜெயக்குமார் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி. அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த அவர், திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார்.

அண்மையில் பெருந்துறை தொகுதியில் விஜய் ரோடு ஷோ வந்த போதும், ஜெயக்குமாருடன் நெருக்கம் காட்டினார். அதேபோல் அமைச்சர் செங்கோட்டையனும் ஜெயக்குமார் தான் பெருந்துறை இடைத்தேர்தல் வேட்பாளர் என்று கூறிவிட்டார். இதனால் பெருந்துறை தொகுதியில் தவெகவின் இடைத்தேர்தல் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் முத்துசாமி அங்கு களமிறங்க கூடும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் பெருந்துறை தொகுதியில் போட்டியிடலாம் என்ற பேச்சுகள் அடிபட தொடங்கி இருக்கிறது. இதனால் ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலின் போதே திமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட திவ்யா சத்யராஜ் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அப்போது திவ்யா சத்யராஜ்-க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் தேர்தல் தோல்விக்கு பின் சத்யராஜ் தொடர்ச்சியாக தவெகவை அட்டாக் செய்து வருகிறார். மறுபக்கம் ஸ்டாலின் தோல்விக்கு சத்யராஜ் கண்ணீர் விட்டு பொதுவெளியில் அழுததும் கவனம் பெற்றது.
பெருந்துறை தொகுதியில் திவ்யா சத்யராஜ் களமிறக்கப்படுவதற்கான பேச்சுகள் வெளி வருவது அவரின் சமூக பின்னணியும் ஒரு காரணம். இதுதொடர்பாக திவ்யா சத்யராஜ் பேசுகையில், தலைமை வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன். பெருந்துறையில் போட்டியிடுவது குறித்து இப்போது பேச முடியாது. விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக சார்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இளம் வேட்பாளர்கள் தான் களமிறக்கப்பட்டனர். அது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல கவனம் பெற்றது. இதனால் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
