அமைச்சர் நிர்மல்குமார் தான் காரணம்.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோபம்.. கடும் போலீஸ் பாதுகாப்பு!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றவி்ல்லை. திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

இது பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சியர், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும், சட்டத்துறை அமைச்சருமான சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் காவல் துறையினரை கண்டித்து திருப்பரங்குன்றம் கோயில் அருகே நேற்று இரவு பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் நேற்று செய்த பதிவு பெரும் கவனம் பெற்றது.
இந்நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்றாததற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக கூறி மதுரை திருநகரில் உள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அலுவலகம் மற்றும் தனக்கன்குளத்தில் உள்ள அவரது வீடுகளை இந்து முன்னணி கோட்ட செயலாளர் அரசு பண்டிகை தலைமையிலான 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, மதுரை திருநகரில் உள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் சட்டமன்ற அலுவலகம் மற்றும் வீட்டுக்கு 40-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு எதிராகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதையொட்டி அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
