திருப்பரங்குன்றம் தீபம்.. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கிறோம்.. சுருக்கமாக சொன்ன சிடிஆர் நிர்மல்குமார்
மதுரை: திருப்பரங்குன்றம் உச்சி மலையில் உள்ள தூணில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். என்ன செய்யலாம் என்பதை இன்று மாலை அல்லது நாளை காலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் உச்சி மலையில் உள்ள தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் வெறும் சர்வே கல் தூண் என்று தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்கா நிர்வாகம் ஆகிய 3 தரப்பும் வாதங்களை முன் வைத்தன.

இருப்பினும் இடைக்கால தீர்ப்பாக உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தீபம் ஏற்ற தேஸ்வதான நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. பேரணியோ, கோஷமோ, கூட்டமோ போடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறி இருக்கிறது.
கடந்த முறை திமுக ஆட்சியின் போது தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட போது, "We are not allowing.. We will face the consequences" என்று தெரிவிக்கப்பட்டது. இறுதிவரை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மேல்முறையீடும் செய்யப்பட்டது. தற்போது தவெக அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக, இந்து முன்னணி, அண்ணாமலை, அதிமுக, புதிய தமிழகம், பாமக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் தெரிவிப்போம். திங்கட் கிழமை தான் நீதிமன்றம் அடுத்து செயல்படும். ஆலோசனை செய்துவிட்டு முடிவை கூறுவோம் என்று தெரிவித்தார். தவெக அதே நிலைப்பாட்டில் தான் உள்ளதா என்ற கேள்விக்கு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்கிறோம் என்று சுருக்கமாக பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications
