சென்னை- கோவை- தூத்துக்குடி செல்ல இனி 10 மணி நேரமாகாது! வர போகும் எக்ஸ்பிரஸ்வே! விட்டாச்சு டெண்டர்
சென்னை: சென்னை- கோயமுத்தூர்- தூத்துக்குடி இடையே அதிவிரைவு சாலைக்கான (Expressway) அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டரையும் நேற்று கோரியுள்ளது. இந்த திட்டம் மட்டும் அமலுக்கு வந்தால் சென்னை- கோவை- தூத்துக்குடிக்கு இனி 10 மணி நேரமாகாது என்றும் 5 மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்கிறார்கள்.!
சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய 3 முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் புதிய விரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வ டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எக்ஸ்பிரஸ்வே என்பதால் இது ஏதோ சாலை திட்டம் என்று மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. தமிழகத்தின் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தையே உண்மையாக்க போகும் திட்டம் எனலாம்.
இந்தியாவின் டெட்ராய்டு
இந்தியாவின் டெட்ராய்டு என சென்னையை அழைக்கிறோம். இதற்கு காரணம் இங்கு, ஏராளமான ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் இருப்பதால்தான். ஹூண்டாய், அசோக்லேலாண்ட், ராயல்என்பீல்டு, பிஎம்டபிள்யூ, ரெனால்ட் நிச்சான் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. அத்துடன் எலக்டானிக்ஸ், ஐடி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன.
சாலைகள் முக்கியம்
ஒரு நகரம் முன்னேற வேண்டும் என்றால் அங்கு வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும் என்றால் தொழில்நிறுவனங்கள் இருத்தல் வேண்டும். தொழில் நிறுவனங்கள் துரிதமாக செயல்பட சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும்.
சென்னையை போல் கோவை, தூத்துக்குடி ஆகியனவும் தொழில் நகரங்களாகும். இதில் கோவை மான்செஸ்டர் ஆப் சவுத் இந்தியா என அழைக்கப்படுகிறது. கோவையில் ஜவுளி, பம்ப், மோட்டார் தொழிற்சாலைகள் உள்ளன. அது போல் முத்து நகரமான தூத்துக்குடியில் துறைமுகம், ரசாயனம், உப்பு மீன்வளம் சார்ந்த தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன.
தொழில்நகரங்கள்
இந்த மூன்றுமே தொழில்நகரங்கள் என்பதால் இதை இணைத்தால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்ற நோக்கில் தற்போது விரைவுச் சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் சாலைகள் வழியாக செல்ல வேண்டுமானால் ஊரை சுற்றிக் கொண்டு போக்குவரத்து நெரிசல், குண்டும் குழியுமான சாலையில் செல்ல நேரிடுகிறது. மழை பெய்தால் கேட்க வேண்டாம்.
எத்தனை மணி நேரமாகிறது?
கோவை டூ தூத்துக்குடிக்குச் செல்ல 10 மணி நேரமாகிறது, சென்னை டூ கோவை செல்ல 8 மணி நேரம் வரை ஆகிறது. சென்னை டூ தூத்துக்குடி செல்ல 11 மணி நேரமாகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு சரக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் அதிகம் செலவாகிறது. அத்துடன் நேரமும் வீணாகிறது. தூத்துக்குடி துறைமுத்திற்கோ சென்னை துறைமுகத்திற்கோ பொருட்களை கொண்டு சேர்ப்பதிலும் தாமதமாகிறது.
5 மணி நேரம்
எனவே விரைவுச் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால் சென்னை- கோவை- தூத்துக்குடிக்கு 5 மணி நேரத்தில் செல்லலாம். இந்த சாலை அமைக்கப்பட்டால் நேரம், எரிபொருள் மிச்சமாவதுடன், வேலைவாய்ப்பு பெருகும். அதாவது புதிய சாலை வந்தால் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மருந்தகங்கள், ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்.
விளை பொருட்கள்
அது போல் விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களை துரிதமாக பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்ல முடியும். புதிய அகலமான சாலைகளால் சாலை விபத்துகள் குறையும்.இ இந்த விரைவுச்சாலை மட்டும் வந்துவிட்டால் தமிழகத்தின் நீண்ட நெடிய வளர்ச்சிக்கான காரணியாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.




Click it and Unblock the Notifications
