ஓடும் பஸ்ஸில் அவசரமாக டிரஸ் மாற்றிய 2 பெண்கள்.. கண்டக்டருக்கு சந்தேகம்! மறைந்திருந்த அதிர்ச்சி
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட சிலரும் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அப்படி பக்தர்கள் கூட்டத்தில் திருட முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 2 பெண்கள் கேரளாவில் சிக்கியுள்ளனர். அவர்கள் பஸ்ஸில் செய்த ஒரு காரியம்தான் டிரைவர், கண்டக்டருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால யாத்திரை தொடங்கியுள்ளதால் கேரளா முழுவதும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக எருமேலி உள்ளிட்ட யாத்திரை வழித்தடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடம் இருந்து பணம், நகைகளைத் திருட சிலர் திட்டமிட வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கவனமாக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

2 பெண்கள் யார்
கோழஞ்சேரியிலிருந்து ரான்னிக்கு செல்லும் தனியார் பஸ்ஸில் 2 பெண்கள் ஏறியுள்ளனர். அவர்கள் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது.
உடனே அந்த 2 பெண்களும், அவசர அவசரமாக தங்களது உடைகளை பஸ்ஸூக்குள்ளேயே மாற்ற ஆரம்பித்து விட்டார்கள்.. இதைக் கவனித்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு சந்தேகம் வந்து விட்டது.. எதுக்காக இந்தப் பெண்கள் அவசர அவசரமாக உடைகளை மாற்றுகிறார்கள் என்று அவர்கள் யோசித்துள்ளனர்.
பஸ்ஸில் பெண்கள் இப்படி உடைகளை மாற்றி, வித்தியாசமாக நடந்து கொண்டதால், டிரைவர், கண்டக்டரின் சந்தேகம் அதிகரித்து, உடனடியாக ரான்னி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர்.. ரான்னி போலீஸ் ஸ்டேஷன் அருகே அந்தத் தனியார் பஸ்ஸை நிறுத்திய போலீஸார், அதில் பயணம் செய்த 2 பெண்களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தனியார் பஸ்ஸில் உடை மாற்றி..
போலீசாரை பார்த்ததுமே 2 பெண்களும் பதற்றமடைந்து விட்டனர்.. மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில்களை சொல்லி மழுப்பியிருக்கிறார்கள்.. இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது மேலும் சந்தேகம் ஏற்பட்டது.
பெண் போலீசார் 2 பெண்களிடமும் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பெண் தனது ஆடைக்குள் ரூ.21,000 பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்தப் பணம் எப்படி கிடைத்தது என்று போலீசார் கேட்டபோது, 2 பேருமே திருதிருவென விழித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பார்வதி, தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த கீதா என்பது தெரியவந்தது. ஆனால், இவர்கள் பார்வதி, கீதா என்ற பெயர்களில் மட்டுமின்றி பவானி, அனு, லட்சுமி உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களிலும் செயல்பட்டு வந்துள்ளனர்.
பழைய திருட்டு வழக்குகள்
போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, இருவருக்கும் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சாதாரண பயணிகள் அல்ல என்றும், சபரிமலை சீசனில் பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி திருடுவதற்காக வந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பஸ் கண்டக்டர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் பிடித்த ரான்னி போலீசார், பார்வதி மற்றும் கீதாவை கைது செய்துள்ளனர். இதுவரை எந்தெந்த பகுதிகளில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
பக்தர்கள் கவனம்
சபரிமலை சீசனில் எருமேலி உள்ளிட்ட யாத்திரை வழித்தடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் பஸ் நிலையங்கள், பயண வழித்தடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பக்தர்கள் தங்களது பணம், நகை உள்ளிட்ட உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாராவது நடந்துகொண்டால் அதை அலட்சியப்படுத்தாமல் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்...!!


Click it and Unblock the Notifications
