7 சதவீதம் வட்டி.. விவசாயிகள் டிஜிட்டல் வசதியில் எளிதில் கடன் பெறுவது எப்படி? தேனி கலெக்டர் விளக்கம்
தேனி: வேளாண் விளை பொருட்களை அடமானமாக வைத்து டிஜிட்டல் வசதியை பயன்படுத்தி எளிதில் கடன் பெறுவது எப்படி என்று தேனி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். கிசான் கிரெடிட் கார்டு (KCC) வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், ரூ.3 லட்சம் வரையிலான அடமானக் கடனை ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியில் ஆறு மாதங்களுக்குப் பெறலாம்.
தேனி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் (WDRA) பதிவு பெற்ற கிடங்குகளில் சேமித்து, அவற்றின் மீது வங்கிகளில் எளிதாகக் கடன் பெறும் வகையில், மத்திய அரசு e-Kisan Upaj Nidhi (e-KUN) என்னும் டிஜிட்டல் தளத்தை ஜன்சமர்த் (www.jansamarth.in) இணையதளத்தில் செயல்படுத்தி வருகிறது.

இது மத்திய அரசின் நிதிச்சேவைகள் துறை, உணவு மற்றும் பொது வினியோகத்துறை, கிடங்கு மேம்பாடு, மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
அறுவடைக்குப் பிந்தைய கடனைப் பெறலாம்
இத்தளம், கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையகிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுபெற்ற கிடங்குகளில் வேளாண் விளைபொருள்களைச் சேமித்துள்ள விவசாயிகள் வங்கிகளிடம் இருந்து அறுவடைக்குப் பிந்தைய கடனைப் பெற உதவுகிறது. இதன்மூலம், விவசாயிகள் அறுவடைக்குப் பின் உடனடியாகக் குறைந்த விலைக்கு விளைபொருள்களை விற்கும் நிலையைத் தவிர்த்து, நல்ல விலை கிடைக்கும் வரை காத்திருந்து விற்பனை செய்ய முடியும். மேலும், தரவுகள் தடையின்றிப் பரிமாறப்படுவதால் கடன் பெறுவதற்கான காலமும் குறையும்.
செல்போன் எண் மூலம் பதிவு
இத்திட்டத்தின் கீழ், கிடங்கு உரிமையாளர் விவசாயியின் களஞ்சியக் கணக்கில் வழங்கும் மின்னணு பேச்சுவார்த்தைக்குரிய கிடங்கு ரசீது அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இணையதளத்தில் செல்போன் எண் மூலம் பதிவு செய்து, தங்களது களஞ்சியக் கணக்கு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. மூலம் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
வங்கிக் கிளையையும் தேர்ந்தெடுக்கலாம்
பான் கார்டு சரிபார்ப்பு விருப்பத்திற்குரியது. பான் கார்டு இல்லாதவர்களுக்குப் படிவம் 60 தானாக உருவாக்கப்படும். அதனைத் தொடர்ந்து, வங்கிகளின் வட்டி விகிதம், கடன் தொகை உள்ளிட்ட சலுகைகள் காண்பிக்கப்படும். அவற்றில் தங்களுக்கு ஏற்ற சலுகையை விவசாயிகள் தேர்வு செய்து, தங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளையையும் தேர்ந்தெடுக்கலாம். தேர்வு செய்தபின், தளம் மூலம் டிஜிட்டல் முறையில் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்படும். அதன்பின், விவசாயி வங்கிக்குச் சென்று தேவையான ஆவண நடைமுறைகளை முடித்தவுடன், வங்கி மின்னணு பேச்சுவார்த்தைக்குரிய கிடங்கு ரசீது உரிமைப் பதிவு செய்து கடன் தொகையை வழங்கும்.
7 சதவீதம் வட்டியில் கடன்
மின்னணு கிடங்கு ரசீது செல்லுபடிக் காலம், விளைபொருளின் சேமிப்புக் காலத்துடன் முடிவடையும். கடனுக்கான அதிகபட்ச காலம், விளைபொருளின் சேமிப்புக்காலம் அல்லது செல்லுபடிக்காலத்திற்கு ஏற்ப, 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்கும். கடன் காலம் வங்கிக்கு வங்கி மாறுபடும். கிசான் கிரெடிட் கார்டு (KCC) வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், ரூ.3 லட்சம் வரையிலான அடமானக் கடனை ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டியில் ஆறு மாதங்களுக்குப் பெறலாம்.
தேனி விவசாயிகளுக்கு 22 கிடங்குகள் உள்ளன
தேனி மாவட்டத்தில் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற 22 கிடங்குகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 36,100 டன் ஆகும். மின்னணு கிடங்கு ரசீதுஅடிப்படையிலான அடமானக் கடன்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ரூ.1,000 கோடி தொகுப்பு நிதியுடன் கடன் உத்தரவாதத் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.




Click it and Unblock the Notifications
