வீட்டுக் கடன் நிலுவையில் இருக்கா? அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி.. 24,301 பேருக்கு நல்ல வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் வாங்கிய பலர் நீண்ட காலமாக தவணை செலுத்த முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் தமிழக அரசு ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.. ஆமாம், இந்த திட்டம் மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனை குறைந்த தொகையில் முடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அபராத வட்டி உள்ளிட்ட பல வகையான வட்டிகள் தள்ளுபடியும் செய்யப்பட உள்ளன. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
வீடு கட்டுவதற்காகவும், வீடு வாங்குவதற்காகவும், வீட்டை பழுதுபார்க்கவும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு வட்டித் தள்ளுபடி அறிவித்துள்ளது.

யார் யாருக்கு சலுகை
கடன் தவணையை செலுத்த முடியாமல் நிலுவையில் வைத்திருப்பவர்கள் இந்த ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். ஆனால் எல்லா கடன்களுக்கும் இந்த சலுகை கிடைக்காது. 2026 மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பே கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் முடிந்திருக்க வேண்டும். கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும்.
அதாவது 2026 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு தவணை செலுத்த தவறியவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேபோல், கடனை திருப்பிச் செலுத்த இன்னும் கால அவகாசம் இருப்பவர்களுக்கும் இந்த சலுகை கிடையாது.
என்னென்ன தள்ளுபடி?
கடன் வாங்கியவர்கள் தவணையை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால், கூடுதல் வட்டி விதிக்கப்படும். இந்த கூடுதல் வட்டி இனிமேல் இந்த திட்டத்தின் கீழ் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்... அதுமட்டுமல்லாமல், கோர்ட் மூலம் கடனை வசூலிக்க உத்தரவு பெற்ற பிறகு விதிக்கப்படும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்... தவணை தவறிய கடனுக்கு விதிக்கப்பட்ட இஎம்ஐ வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
குறைந்த வருவாய் உள்ள குடும்பங்கள் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக 1 சதவீத வட்டித் தொகையும் தள்ளுபடி செய்யப்படும்... இதனால் நீண்ட காலமாக கடன் சுமையில் இருப்பவர்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
24,301 பேருக்கு சூப்பர் சான்ஸ்
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு அளித்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 24,301 உறுப்பினர்கள் கடன் தவணையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்ற விவரங்களையும் பார்க்கலாம்
- தமிழகம் முழுவதும் 24,301 உறுப்பினர்கள் கடன் தவணையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
- இவர்களுக்கான மொத்தக் கடன் மற்றும் வட்டி நிலுவை ரூ.2,430.28 கோடியாக உள்ளது.
- ஒருமுறை கடன் தீர்வுத் திட்டம் மூலம் சுமார் ரூ.776.42 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தால் ஏற்படும் நிதி இழப்பை சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களே ஏற்கும். இதனால் அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படாது" - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி கடனை முடிப்பது?
இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் முதலில், நிலுவையில் உள்ள தொகையை முழுமையாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகவோ, மாத தவணையாகவோ பணம் செலுத்த முடியாது.. அதேபோல செலுத்தும் தொகை முதலில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன் பிறகுதான் அசல் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒருவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். ஏற்கெனவே இதுபோன்ற ஒருமுறை கடன் தீர்வுத் திட்டத்தில் சலுகை பெற்றவர்கள் மீண்டும் இதில் சேர முடியாது.
யார் யாருக்கு கிடைக்காது?
கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் தங்களது சொந்த பணத்தில் இருந்து வழங்கிய கடன்களுக்கு இந்த சலுகை கிடையாது. அதேபோல், முறையற்ற வகையில் வழங்கப்பட்ட கடன்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது... கூட்டுறவு வீட்டுவசதி இணையம் அல்லது சங்கங்கள் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கிய கடன்களுக்கும் இந்த சலுகை கிடையாது.
கடன் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அந்த வழக்கை திரும்பப் பெற்ற பிறகுதான் இந்த திட்டத்தில் சேர முடியும்., மேலும், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை சம்பந்தப்பட்ட வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது.
வீடு காப்பாற்ற வாய்ப்பு
பல காலமாகவே, கடனை கட்ட முடியாமல் இருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்கள் கடனை முடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது... வீட்டை ஜப்தி செய்து விடுவார்களோ, கோர்ட்டுக்கு போக வேண்டிய நிலை வருமோ என்றெல்லாம் கலக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
முழு நிலுவை தொகையையும் செலுத்தி கடனை முடித்தால் வீட்டை தங்களது பெயரிலேயே தொடர்ந்து வைத்திருக்க முடியும். அத்துடன் நீண்ட காலமாக வசூலாகாமல் இருக்கும் பணம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு மீண்டும் கிடைக்கும். இதனால் மற்றவர்களுக்கும் வீட்டுக் கடன் வழங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்..!!




Click it and Unblock the Notifications
