கழுகுமலையில் என்ன நடக்கிறது? பஸ் ஸ்டாப்பில் டீச்சரிடம் அட்டகாசம்.. தூத்துக்குடி பெண்ணுக்கு ஆபாச SMS
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உடம்பு சரியில்லை என்பதால், பஸ் ஸ்டாப்பிலுள்ள நிழற்குடையில் ஓய்வெடுத்துள்ளார் ஒரு ஆசிரியர்.. அவரிடமே செல்போன், பணம் பறிக்கப்பட்டுள்ளது. ,இதே கழுகுமலையிவ் நடந்த மற்றொரு சம்பவத்தில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, தட்டிக் கேட்டதால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 சம்பவங்களிலும் போலீசார் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கயத்தாறு அருகே குப்பனாபுரம் ஒட்டுடன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த ராமர் மகன் லட்சுமணப்பெருமாள் (39). இவர் வில் வித்தை ஆசிரியராக உள்ளார்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வில் வித்தை டீச்சர்
அப்போது கழுகுமலை ஹெச்லாபுரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த பயணிகள் நிழற்குடையில் ஓய்வெடுத்துள்ளார்... அந்த நேரத்தில் அங்கு வந்த 2 பேர், லட்சுமணப்பெருமாளிடம் அவதூறாக பேசி அவரை மனசாட்சியே இல்லாமல் தாக்கியிருக்கிறார்கள்.. பிறகு அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.600 பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வில் வித்தை ஆசிரியர், இதுகுறித்து உடனே கழுகுமலை போலீசாரிடம் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தென்காசி மாவட்டம் நைனாபட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த செல்லையா மகன் காசிராஜா (22) என்பவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு நபரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்
இதே கழுகுமலை பகுதியில் மற்றொரு சம்பவமும் நேற்றைய தினம் நடந்துள்ளது. கே.வேலாயுதபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்விஜய் (30). இவர் பெண் ஒருவருக்கு தனது செல்போனிலிருந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பியபடியே இருந்துள்ளார்.. அத்துடன், அந்த பெண்ணுக்கு போனை போட்டும் டார்ச்சர் செய்து வந்துள்ளார்..
ஒருகட்டத்தில் கோபமும், எரிச்சலும் அடைந்த அந்தப் பெண், அருண்விஜய்யைக் கண்டித்துள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கழுகுமலை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்விஜய்யைக் கைது செய்தனர்.
கழுகுமலை பரபரப்பு
ஒரு பக்கம் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்த ஆசிரியரிடம் வழிப்பறி நடந்துள்ளது. இன்னொரு பக்கம் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 2 சம்பவங்களும் அடுத்தடுத்து வெளிவந்துள்ளதால் கழுகுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழிப்பறி சம்பவத்தில் தப்பிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்...!!!




Click it and Unblock the Notifications
