கனிமொழி பேசலைன்னா.. அதிமுக கேஸ் போடலைன்னா.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தப்பியிருப்பாருல்ல?
சென்னை: பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக அரசு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இருப்பினும், திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரத்தை பொதுவெளியில் எழுப்பியது, அதிமுக தரப்பு நீதிமன்றத்தை அணுகியது, அதன்பிறகு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது என அடுத்தடுத்த சம்பவங்களுக்குப் பிறகே எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் , பெண் கலெக்டர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்றே தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லி வந்தனர். கடைசியில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனிமொழி
இது குறித்து முதலில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடந்த நவம்பர் 10ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதல்வர் இதற்கு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
தவெக தரப்பு
தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருவதாக கூறினார். குறைந்தபட்சம் தேசிய மகளிர் ஆணையமாவது தலையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குள் தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபியிடம் கேட்டிருந்தது.
இருப்பினும், இந்த விவகாரம் வெளியானதும், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், சமூக வலைதளத் தகவல்களை சரிபார்க்காமல் கனிமொழி பதிவிட்டதாக விமர்சித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முறையான புகார் வந்தால் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆளும் தரப்பிலிருந்தே இதுபோன்ற விளக்கங்களே வந்துகொண்டிருந்தன.
அதிமுக
இதற்கிடையே அதிமுக தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி நவம்பர் 11ஆம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து, நவம்பர் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எம்எல்ஏ மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
நவம்பர் 23ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தாரா, தலைமை செயலருக்கு புகார் வந்ததா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அன்றைய தினமே போலீசாரிடம் ஆட்சியர் நேரடியாக புகார் அளித்தார்.
வேறு வழியில்லாமல் நடவடிக்கை
இதையடுத்து நவம்பர் 24ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. விசாரணையை ஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்தே இன்றைய தினம் எம்எல்ஏ விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு என வரும்போது தானாக முன்வந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கனிமொழி இந்த விவகாரத்தை எழுப்பி, அதிமுக தரப்பு வழக்கு தொடர்ந்தே பிறகே வேறு வழியில்லாமல் விஜய் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.




Click it and Unblock the Notifications
