எல்லாருமே ஜெயிலுக்கு போகனும்.. அடிச்சு தான் விசாரிப்பீங்களா? செக்கானூரணி வழக்கில் ஹைகோர்ட் காட்டம்!
மதுரை: செக்கானூரணி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை பணி புரியும் அனைவருமே கைது செய்யப்பட கூடியவர்கள் எனவும், காவல் நிலையம் மரணம் நடந்துள்ளதற்கு காவலர்கள் வெட்கப்பட வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தின் அனைத்து சட்ட விதிகளும் மீறப்பட்டுள்ளது எனவும், ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யவில்லை. ஒருவர் மீது கூட துணை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஓட்டுனர் பாலகிருஷ்ணன் நவம்பர் 11ம் தேதி காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது உடற்கூராய்வில் உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும், 50 லட்ச ரூபாயை இடைக்கால இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உடற்கூராய்வு அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள், உடற்கூராய்வில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விசாரணை அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வழக்கை பிறப்பகல் 3:30 மணிக்கு தள்ளி வைத்தனர்.
மீண்டும் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, வலந்தூரில் விசாரணைக்கு அழைத்து, செக்கணூரணி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றது ஏன்? கைதும் செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. அப்படி எனில் இரண்டு நாள்களாக காவலில் ஏன் வைத்தீர்கள்? வாலந்தூர் எஸ்ஐ செக்கணூரணி வந்தது ஏன்? தூக்கில் தொங்கியது போல் புகைப்படம் எங்கு உள்ளது? உடலில் காயங்கள் உள்ளது.
காவல்நிலையத்தில் பணி புரியும் அனைவருமே இந்த வழக்கில் கைது செய்யப்பட கூடியவர்கள் தான். சிபிசிஐடி இப்படி தான் விசாரிப்பதா? யாரை பாதுகாக்க நினைக்கிறீர்கள்? காவல்நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி , ஆனால் இதற்கு யார் காரணம் என்பது தான் தற்போது பிரச்சனை, ஏன் காவல் நிலையத்தில் பணி புரியும் யாரையும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்படவில்லை.காவல் நிலையத்தில் மரணம் ஏற்பட்டுள்ளது வெட்கப்பட வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
மேலும், இந்த வழக்கில் சட்ட விதிகள் அனைத்தும் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. அவர் குற்றவாளியாக இருந்தாலும் கூட அவரை இரவு முழுவதும் வைத்து விசாரிப்பதற்கான காரணம் என்ன? யாரிடம் அதற்கு அனுமதி வாங்கினீர்கள்? காவல் நிலையத்தில் மரணம் ஏற்பட்டுள்ளது சட்ட விதிகளை பின்பற்றி ஏன் புகைப்படம் எடுக்கவில்லை? இவையெல்லாம் பார்க்கும் போது இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து சிபிசிஐடி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை மறுநாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.




Click it and Unblock the Notifications
