Thiruparankundram Deepam: தவெக இஸ் மோர் டேஞ்சரஸ் தென் திமுக.. ஆளுநரை சந்தித்து கம்ப்ளைண்ட் கொடுத்த இந்து முன்னணி!
மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை மீது உள்ள தீப தூண் என சொல்லப்படும் கல் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு தீபம் ஏற்றப்பட்ட இடத்திலேயே நேற்றும் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு கொடுத்துள்ளது. அதை நிறைவேற்றுவது தான் மாவட்ட ஆட்சியரின் பணி. அதை அவர் நிறைவேற்றி இருக்க வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக ஆட்சி போலவே தவெக ஆட்சியும் பின்பற்றி வருகிறது. திமுகவை விடவும் மிக மோசமாக இந்த விவகாரத்தை தவெக அணுகுகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இடைக்கால அனுமதி வழங்கியது. இதற்கிடையே நேற்றிரவு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியது. இதனால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபம்
இதற்கிடையே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே தீப தூணில் தீபம் ஏற்றப்படும் என காத்திருந்த இந்து அமைப்பினர் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இதை அடுத்து சன்னதி வீதியில் போராட்டமும் வெடித்தது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநரை சந்தித்தார்.
காடேஸ்வரா சுப்பிரமணியம்
இதனைத் தொடர்ந்து மக்கள் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நேற்று திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றப்படும் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முருக பக்தர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கு முழு பொறுப்பையும் அந்த மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ள வேண்டும்
மாவட்ட ஆட்சியர்
இதற்காக திருபரன்குன்றத்தில் இருக்கக் கூடிய முருக பக்தர்களும், இந்துக்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசாங்கமும் இதேபோன்று நடந்து கொண்டது அப்போது மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டார். இப்போதும் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு கொடுத்துள்ளது. அதை நிறைவேற்றுவது தான் மாவட்ட ஆட்சியரின் பணி. அதை அவர் நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் அல்ல. அங்குள்ள பொதுமக்கள் யாரும் இதற்கு போராட்டம் நடத்தவில்லை என்கிறார்கள். வெளியூர்களில் இருந்து குடும்பங்களாக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தீபத்தை பார்க்க வந்திருந்தனர்.
தவெக ஆட்சி
இந்த விவகாரத்தில் திமுக ஆட்சி போலவே தவெக ஆட்சியும் பின்பற்றி வருகிறார்கள். திமுகவை விட தவெக மிக மோசமாக இந்த விவகாரத்தை அணுகுகிறது. அந்த கல்தூண் என்பது அளவு தூணில்லை. அவ்வளவு தூரத்தில் அளவு தூண் வைக்கப்பட மாட்டாது." என்றார்.




Click it and Unblock the Notifications
