இன்னைக்கு நைட் விடாமல் கொட்டப் போகுது மழை.. 18 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை தமிழகம் முழுக்க 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், கோவை, ஈரோடு, நெல்லை, தென்காசி, குமரி உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை விட்டு விளாசியது. நேற்று முன் தினம் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆரம்பித்த மழை நேற்று பரவலாக மிதமான மழையாக பெய்தது. ஆனால் இன்று தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்ததோடு ஒரு சில இடங்களில் கனமழையும் விடாமல் வெளுத்து வாங்கியது. நெல்லை, தென்காசி, குமரி, கரூர், மதுரை, தின்டுக்கல் என பரவலாக மழை பெய்தது.

இரவு 10 மணி வரை..
கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தென்காசி, நீலகிரி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
