தமிழ்நாட்டில் நிலம் இல்லாமல் ரயில்வே திட்டங்களை எப்படி செயல்படுத்துவோம்..ரயில்வே அமைச்சர் கேள்வி
சென்னை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை நேற்று சென்னையில் முன்வைத்திருந்தார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைத் தடுப்பது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். இது நாட்டின் நாகரிகப் பாரம்பரியத்தையும் கோயில் மரபுகளையும் அழிக்கும் முயற்சி என்றும் கடுமையாக எச்சரித்தார். ரயில்வே திட்டங்கள் குறித்து பேசிய அஸ்விணி, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவைப்படும் சுமார் 4,800 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை 1,253 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது மொத்தத் தேவையில் வெறும் 24 சதவீதம் மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.
நேற்று சென்னையில் பாஜக சார்பில் அரசியலமைப்பு தின விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ் இ எதிர்காலத்தில் மக்கள் கோயில்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுமா என்றும் தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். இதுபற்றி அவர் பேசும் போது, "தமிழ்நாடு அப்படியேதான் உள்ளது. ஒரு தீபம் ஏற்றுவதைத் தடுத்து, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி இருக்கீங்க.. பொதுமக்களின் உணர்வுகளைச் சிதைத்து, பாதிப்படைய வைத்துள்ளீர்கள். இன்று ஒரு கார்த்திகை தீபத்தை ஏற்றுவதைத் தடுத்துள்ளீர்கள். நாளை யாரும் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வீர்களா? கோயில்களையே மூடிவிடுவீர்களா? இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா?"

அரசியலமைப்புக்கு உண்மையான மரியாதை அளிப்பது என்பது என்ன தெரியுமா? மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன், நமது கலாச்சாரம், முருகப் பெருமான் மற்றும் தொன்மையான பாரம்பரியம் குறித்து பெருமை கொள்வதும் தான்" என்று அமைச்சர் கூறினார்.
தவெக அரசுக்கு அறிவுரை
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக தவெக அரசுக்கு அஸ்வினி வைஷ்ணவ் சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கினார். "ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தேவையான அனைத்து நிதியையும் வழங்கும். இப்படி செய்தால் எந்தவித சிரமமும் இல்லாமல் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியும். இதுதான் தமிழர்களுக்கு உரிய பலனை அளிக்கும்.
நிலம் இல்லாமல் எப்படி
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவைப்படும் சுமார் 4,800 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை 1,253 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்தத் தேவையில் வெறும் 24 சதவீதம் மட்டுமே ஆகும். நிலம் இல்லாமல் ரயில்வே திட்டங்களை எப்படிச் செயல்படுத்த முடியும். ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற மாநில அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம் . மத்திய அரசு இரண்டு அடி முன்னெடுத்து வைத்தால், மாநில அரசு ஒரு அடி முன்னெடுத்து வர வேண்டும் , அப்போதுதான் தமிழ்நாடும் தமிழக மக்களும் முன்னேற முடியும் .
தலைவர்கள் தங்களுக்கான பொறுப்புகளில் இருந்து விலகக்கூடாது. ஒரு தீபம் ஏற்றுவதைத் தடுக்க சிலரால் முடிந்தாலும், தமிழர்களின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உலகளாவிய மதிப்பையும் தடுத்துவிட முடியாது. தமிழர்களின் பெருமை என்றும் நிலைத்திருக்கும் " என்று அமைச்சர் கூறினார்.
காங்கிரஸ் மீது அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு
தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு நடைமுறைகளை காங்கிரஸ் நிராகரிப்பதாகவும், நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம்சாட்டினார் . வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியான எஸ்ஐஆர் (SIR) தமிழ்நாட்டில் எந்தவித எதிர்ப்பும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், காங்கிரஸ் தனது தோல்விகளுக்கு எஸ்ஐஆர் நடைமுறையைக் காரணம் காட்டுவதாக விமர்சித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறும் போது, "காங்கிரஸ் தனது தோல்விகளுக்கு எஸ்ஐஆர் நடைமுறையைக் காரணமாகக் கூற விரும்புகிறது. இதுபோலவே தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அரசியலமைப்பு முக்கியமல்ல; குடும்பம்தான் முக்கியம். அதுதான் அவர்களுக்கு எல்லாமே. டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை." என்றார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தொடர்பாகவும் காங்கிரஸ் தொடர்ந்து புகார் தெரிவிப்பதை அவர் முற்றிலும் நிராகரித்தார்.
காங்கிரஸ் உழைக்க தயாராக இல்லை
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் பூஜ்ஜிய இடங்களையே வென்றது என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி அடிமட்ட அளவில் உழைப்பதற்குத் தயாராக இல்லை என்றும், தொடர்ந்து ஒரு குடும்பத்தின் பெயரை மட்டுமே நம்பியிருப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம்சாட்டினார்.




Click it and Unblock the Notifications
