மாடி ரூமில் கரண்ட் கட்.. அதிகாலையில் வாக்கிங் கிளம்பிய மருமகளுக்கு ஷாக்.. கோவை சூலூரில் என்ன நடந்தது
கோவை: குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் மோதல்கள் சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விபரீதமாகிவிடுகின்றன. அப்படியொரு அதிர்ச்சியான சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்துள்ளது. மாமனார் மாடசாமி இவ்வளவு கோபக்காரரா என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. குடும்பத்தில் நடந்த விபரீதம் தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது கங்கல் என்ற கிராமம்.. இங்கு அபிராமி கார்டன் பகுதியில் செல்வகுமார் (36) தனது மனைவி நந்தினி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.

கோவை மருமகள் - மாமனார்
செல்வகுமார் தனது மனைவி நந்தினி, மகன், மகளுடன் சூலூர் அருகிலுள்ள கங்கல் கிராமம் அபிராமி கார்டன் பகுதியில் வசித்து வந்தார். இவரது அப்பா மாடசாமியும், அம்மாவும், மகன் செல்வகுமார் வீட்டின் மேல் மாடியில் உள்ள தனி அறையில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாடசாமி மகன் வீட்டில் தங்கியிருந்தபோது மருமகள் நந்தினியிடம் தவறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இது நந்தினிக்கு கோபத்தை தந்தது.. அத்துடன் வீட்டில் மாமனார், மருமகள் இடையே பிரச்சினையும் ஏற்பட்டது.
இவர்கள் இருவரிடமும் சிக்கி விழித்த செல்வக்குமார், தன்னுடைய அப்பா மாடசாமியை, சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இதனிடையே, செல்வகுமாரின் அண்ணன் தங்கராஜ் சூலூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டைக் கட்டும் பணிகளை கவனித்து கொள்வதற்காக தந்தை மாடசாமியை மறுபடியும் சூலூருக்கு அழைத்து வந்தார். இதனால் மாடசாமியும் அவரது மனைவியும் மறுபடியும் செல்வகுமார் வீட்டின் மேல் மாடி ரூமிலேயே தங்கவேண்டி வந்தது.. அப்போது நந்தினிக்கும் மாடசாமிக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
செல்வக்குமார் - மாடசாமி
உடனே செல்வக்குமார், தன்னுடைய தந்தையை மீண்டும் ஊருக்கு சென்றுவிடும்படி சொல்லியிருக்கிறார்.. ஆனால், இந்த முறை மாடசாமி அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டாராம்.. இது செல்வக்குமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. அதனால் சம்பவத்தன்று, தன்னுடைய அப்பா தங்கியிருந்த மாடி அறையின் கரண்ட் கனெக்ஷனை துண்டித்து விட்டாராம்.
இதனால் மாடசாமி கொந்தளித்து விட்டார்.. மருமகள் சொல்லித்தான், மகன் தன்னை அவமதிப்பதாக நினைத்து, இருவரையுமே கொன்றுவிடுவதென்று முடிவெடுத்தாராம்.. இதற்காகவே விடியும் வரை காத்திருந்ததாகவும் தெரிகிறது.
அதிகாலையில் நந்தினி வாக்கிங் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி, திடீரென அரிவாளால் நந்தினியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நந்தினி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்போதும் மாடசாமியின் ஆத்திரம் அடங்கவில்லை. வீட்டுக்குள் சென்று, தூங்கிக் கொண்டிருந்த மகன் செல்வகுமாரையும் முகத்தில் அரிவாளால் வெட்டினார். வலி தாங்க முடியாமல் செல்வகுமார் அலறித் துடித்தார்.
மருத்துவமனையில் அனுமதி
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து நந்தினி, செல்வகுமார் இருவரையும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். இப்போது ஜெயிலுள்ள அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.. இதையடுத்து நந்தினியின் உடலை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் இந்தச் சம்பவம் தொடர்பாக அடிதடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. நந்தினி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய சூலூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...!!




Click it and Unblock the Notifications
