கோவை சர்வேயர்.. ஜி-பே மூலம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்.. தவெக ஆட்சியிலும் இதே நிலைதானா? தீர்வு என்ன?
கோவை: கோவை அருகே நிலத்தை அளவீடு செய்து தனிப் பட்டா பெறுவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அரசு உரிமம் பெற்ற நில அளவையர் மற்றும் இடைத்தரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வேயர் முதலில் ரூ.20 ஆயிரம் கேட்ட நிலையில், புகார் அளிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் மேலும் ரூ.5 ஆயிரம் அதிகரித்துக் கேட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாறினாலும் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மட்டும் தொடர்ந்து வருவது பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
சூலூர் பகுதியில் அரசு உரிமம் பெற்ற நில அளவையராக இருப்பவர் 35 வயதான பாலமுருகன். 35 வயதாகிறது.. அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருபவர் 32 வயதான பிரவீன்குமார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த அருண்குமார் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சூலூர் அருகே கலங்கல் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு தனிப் பட்டா பெறுவதற்காக நிலத்தை அளவீடு செய்து, அதற்கான ஆவணங்களைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளார்.

கோவை தனிப் பட்டா
இதற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நில அளவையர் பாலமுருகனை அணுகியுள்ளார். நிலத்தை அளவீடு செய்து, தேவையான ஆவணங்களைத் தயார் செய்து தருமாறு கடந்த ஆகஸ்ட்மாத இறுதியில் சர்வேயர் பாலமுருகனிடம் கேட்டிருக்கிறார்.. நிலத்தை அளவீடு செய்வதுடன், தனிப் பட்டா வழங்குவதற்காக வட்டாட்சியரிடம் பரிந்துரை செய்ய வேண்டிய பணிகளும் இருந்துள்ளன.
அதனால், நிலத்தை அளவீடு செய்து, தனிப் பட்டா பெறுவதற்கான பணிகளை செய்து முடிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் சர்வேயர் ஆனால், அரசு அலுவலகம் மூலம் நடக்க வேண்டிய பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண்குமார், முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
சர்வேயர் சொன்ன ஜிபே
அதற்குள், புகார் அளித்த தகவல் பாலமுருகனுக்கு தெரியவந்தது.. அப்போதுகூட அசராமல், ஏற்கனவே கேட்ட ரூ.20 ஆயிரத்துடன் மேலும் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கறாராக கேட்டாராம். அதுமட்டுமல்ல, இந்தப் பணத்தை தன்னிடம் நேரடியாகக் கொடுக்காமல், இ-சேவை மையம் நடத்தி வரும் பிரவீன்குமாரின் ஜி-பே அக்கவுண்ட்டுக்கு அனுப்புமாறும் சொல்லியிருக்கிறார்..
அதன்படியே அருண்குமார் ரூ.25 ஆயிரத்தை பிரவீன்குமாரின் ஜி-பே கணக்குக்கு அனுப்பியுள்ளார். இதற்கு பிறகே, நிலம் அளவீடு செய்யப்பட்டு, தனிப் பட்டா பெறுவதற்கான ஆவணங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..
இதுகுறித்து அருண்குமார் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய அரசு அனுமதி பெற்ற பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை பாலமுருகன், பிரவீன்குமார் ஆகிய 2 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறை கேள்வி
பொதுமக்கள் அதிகம் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இடங்களில் வருவாய்த்துறையும், பதிவுத்துறையும் முக்கியமானவை. நில அளவீடு, பட்டா மாறுதல், தனிப் பட்டா, பத்திரப்பதிவு என ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுக வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுவது புதிதல்ல. ஆனால் ஆட்சி மாறினால் இந்த நிலை மாறும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் இருக்கிறது.. லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தவெக அரசிலும் அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வெளியாகின்றன.
தவெக ஆட்சி
முதலமைச்சர் விஜய் பதவியேற்றபோது, அரசு பணத்தில் ஒரு பைசாவைக்கூட தொடமாட்டேன் என்றும், மற்றவர்களையும் தொடவிட மாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தார். லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை பணிகளுக்கு இன்னமும் லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது குறைந்துள்ளதாக சில தரப்பினர் கூறினாலும், பட்டா, பத்திரப்பதிவு போன்ற பணிகளில் பணம் கேட்கப்படுவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன..
கோவை மாநகராட்சி தணிக்கை
இதற்கிடையே, கோவை மாநகராட்சியில் கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பணிகள் தொடர்பாக தணிக்கைத்துறை ஆய்வு செய்துள்ளது. இதில் சுமார் ரூ.2,277 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் மற்றும் கணக்குப் பிழைகள் இருப்பதாகத் தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனவே, திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், தற்போதைய ஆட்சியில் லஞ்சம் கேட்கும் நிலையைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
ஆட்சி மாறினாலும் லஞ்சம் கேட்கும் சில அதிகாரிகளின் செயல்பாடு மட்டும் மாறவில்லையா? அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க விஜய் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பதுதான் இப்போது பொதுமக்கள் மத்தியில் எழும் கேள்வி..!!





Click it and Unblock the Notifications
