தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.. பதில் அளிக்காமல் நழுவி சென்ற ராஜ்மோகன்!
சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கு குறித்து விவாதிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை நடைபெறும் என்று கூறிய ராஜ்மோகன், மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற பின் பல்வேறு விஷயங்கள் வெளி வந்துள்ளன. அருள் விக்னேஷ் குறித்து பெண் ஆட்சியர் ஜூலை 31ஆம் தேதியே தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் 116 நாட்களாக வழக்குப்பதிவு கூட செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பெண் ஆட்சியரிடம் புகார் பெற்று, அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே புகார் தொடர்பாக பெண் ஆட்சியரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அருள் விக்னேஷ் எப்போது கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக தரப்பில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன. ஆனால் முதல்வர் விஜய் தொடங்கி தவெகவை சார்ந்த யாருமே இதுவரை வாய் திறக்கவில்லை. 4 மாதங்களாக அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று பேசி வந்தனர்.
அதிலும் அமைச்சர் ராஜ் மோகன், பெண் ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று பேசி இருந்தார். தற்போது அருள் விக்னேஷ் விவகாரம் ஆளுநர் அர்லேகர் வரை சென்றுவிட்டது. இந்த நிலையில் தவெக சார்பாக நீலாங்கரையில் கல்வி விருது விழா நடைபெற்று வருகிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜ் மோகனிடம், அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராஜ்மோகன், ள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய வழக்கு குறித்து விவாதிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய விசாரணை நடைபெறும். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது என்று பதில் அளித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினார்.



Click it and Unblock the Notifications
