'பொது வேட்பாளர்' யாரிடமும் ஆதரவு கேட்டு நிற்க மாட்டேன்.. யூடர்ன் போட்ட சீமான்.. பின்னணி என்ன?
சென்னை: அம்பை தொகுதியில் பொது வேட்பாளராக என்னை ஆதரிக்குமாறு யாரிடமும் கேட்க மாட்டேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமான பேசியுள்ளார். திடீரென சீமான் இப்படி பேசியதன் பின்னணி குறித்து விசாரித்தோம். அதனை விரிவாக பார்க்கலாம்.
கடந்த மாதம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அப்போதே அம்பை தொகுதியில் பொது வேட்பாளராக களமிறங்குகிறீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. ஆனால் சீமான் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புமே, இடைத்தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை.. அறிவித்த பின் பேசலாம் என்று பதில் அளித்தது. அப்போது சீமான், திமுக, அதிமுக என்னை பொது வேட்பாளராக ஆதரித்தால், நிச்சயமாக அவர்களின் ஆதரவை ஏற்றுக் கொள்வேன். பசியில் இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வேனா என்றும் எதிர் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து சீமான் பல்வேறு கட்சிகளிடமும் பொது வேட்பாளராக தன்னை ஆதரிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக, அதிமுக ஆதரவு தெரிவிக்காமல், வேட்பாளரை களமிறக்க தயாராகின. இருப்பினும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தரப்பிடம் சீமான் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இதனால் சீமான் ராக்கெட் ராஜா தரப்பின் ஆதரவை பெற விரும்பினார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல் அம்பை தொகுதியில் நாதக சார்பாக இடைத்தேர்தல் பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் சீமான், அம்பை தொகுதியில் பொது வேட்பாளராக என்னை ஆதரிக்குமாறு யாரிடமும் கேட்க மாட்டேன்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் யாராவது என்னை பொது வேட்பாளர் என்று சொன்னார்களா? அல்லது நாதக தரப்பில் நாங்கள் யாராவது சொன்னோமா? என்று தெரிவித்துள்ளார். இதனால் சீமானை பொது வேட்பாளராக ஆதரிக்க எந்தக் கட்சியும் முன் வரவில்லை என்பதால், கட்சியினரை தயார் செய்ய வெளிப்படையாக பேசத் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அம்பை தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில், வீட்டுக்கு ஒரு வாக்கு என்பதே நாதகவின் இலக்காக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து நாதகவினர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வரவுள்ளனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற சீமான் மனைவி கயல்விழி பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
