கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் எகிறி அடிக்கும் திமுக.. சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திமுக முன்னாள் எம்.பி கனிமொழி சோமு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட பெண் ஆட்சியருக்கு கடந்த ஜூலை மாதம் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

Kallakurichi

இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியிடம் ஆட்சியர் புகார் கொடுத்ததாகவும் அதன்பேரில், அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐபிஎஸ்ஸை நியமித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அவரது விசாரணையை காவல்துறை நிர்வாக ப்பிரிவு ஐஜி என்.காமினி கண்காணிக்கவும் உத்தரவிட்டார். மேலும், டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று எஸ்.பி ஸ்ருஷ்டி சிங் தமது விசாரணையை தொடங்கினார். அருள் விக்னேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். காவல்துறை விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூத்த ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கிடையே, அருள் விக்னேஷ் மீதான புகாரை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திமுக முன்னாள் எம்.பி கனிமொழி சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், "மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது வழக்கின் விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆளும் கட்சி என்பதால் எம்.எல்.ஏ.வை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக புகார் கூறப்படும் நிலையில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆகையால் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக ஆளுநர் அர்லேகரிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+