பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு சலுகை.. இன்னும் 3 நாள் மட்டும்தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: பயிர்க்கடன் முழு வட்டித் தள்ளுபடி சலுகைகளைப் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள், தங்களது தள்ளுபடி தொகை நீங்கலாக, எஞ்சியுள்ள நிலுவைக்கடன் தொகையை, வரும், 30 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தினால், வட்டியில் இருந்து முழு தள்ளுபடி பெறலாம். மேலும் புது பயிர் கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில், 5,70,942 விவசாயிகளுக்கு, 5,190 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 2025 மே 1 ஆம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

அதன்படி, 28.02.2026 அன்று நிலுவையில் இருந்த 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளின் ரூ. 5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
அதன் பின்னர், ஆகஸ்ட் 17 ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி, ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். ரூ. 75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 75,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
பல்வேறு விவசாயிகள் சங்கம் முன் வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பயிர்க்கடன் பெற்ற அனைவருக்கும் ரூ. 75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதுமாகவும், அதற்கு மேல் பெற்ற பயிர்க்கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்கு தலா ரூ. 75,000 வரையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தங்களின் தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவைக் கடன் தொகையை 30.11.2026-க்குள் திருப்பிச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகளின் வசதிக்காக, வரும், 28, 29 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களிலும் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும்.
எனவே பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள், தங்களது தள்ளுபடித்தொகை நீங்கலாக, எஞ்சியுள்ள நிலுவைக்கடன் தொகையை, வரும், 30 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தினால், வட்டியில் இருந்து முழு தள்ளுபடி பெறலாம். மேலும் புது பயிர் கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.
விபரங்களுக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்களை அணுகலாம். அதற்கான வாட்ஸ் அப் உதவி எண்: 98400 65423 மூலம் தேவையான தகவல்களை பெறலாம். விவசாயிகள் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு வழங்கிய, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, கூட்டுறவுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.




Click it and Unblock the Notifications
