தந்த சர்வே நம்பர் இன்வேலிட்.. 2 லட்சம் கொடுத்தால் பட்டா விவரம் தருவதாக சொன்ன மோசடி கும்பல்
சென்னை: நெட்டிசன் ஒருவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நிலம் வாங்குவது தொடர்பாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில்,"தெரிந்தவர்கள் புதுசா நிலம் வாங்க போய்ருக்காங்க, சர்வே நம்பர் கொடுத்துருக்காங்க, ஆனா பட்டா நம்பர் கொடுக்கவில்லை. 2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தால் பட்டா விவரம் தருவதாக கூறியிருக்கிறார்கள். சர்வே நம்பர் போட்டு தேடி பார்த்தால், தவறான சர்வே எண் என்று வந்துள்ளது. டோக்கன் அட்வானஸ் தந்தால் தான் பட்டா தருவதாக கூறி ஏமாற்ற முயன்றுள்ளார்கள் என விவரித்துள்ளார். இப்படி ஏமாற்ற முயன்றால், அவர்களிடம் நிலம் வாங்கும் சமாச்சாராமே வேண்டாம் என்பதே ரியல் எஸ்டேட் நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
பொதுவாக ஊர் பக்கம் எல்லாம் டாகுமெண்ட் நகல் வாங்கி வக்கீலிடம் கொடுத்து வில்லங்கம் பாத்து தான் அட்வான்ஸ் போடுவார்கள். நிலம் அரசு நிலம், பட்டா இல்லாத நிலம், அல்லது பட்டா வாங்க முடியாத நிலம், அனாதீன நிலம், மேய்க்கால் நிலம், ஓடை புறம்போக்கு, கள்ளர் ஜாதி நிலம், பஞ்சமி நிலம், கோவில் நிலம் என வில்லங்கம் இருப்பது தெரிந்தால் அட்வான்ஸ் போட மாட்டார்கள்.

அதேபோல் மோசடியான நிலம், ஒரு சொத்துக்கு மூன்று நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அல்லது வழக்கு உள்ளது என்றாலும் அந்த பக்கமே போக மாட்டார்கள். இன்றைய சூழலில் பல்வேறு வகை வில்லங்கமான நிலங்களை இப்போது அனுபவித்து வருபவர்கள் அதனை விற்கவே முடியாத நிலை தான் இருக்கிறது. இந்த சூழலில் ஒரு சிலர் பட்டா இல்லாத நிலங்களை ஏமாற்றி விற்பதற்காக பணம் கொடுத்தால் பட்டா விவரம் தருவதாக மோசடி செய்கிறார்கள். அப்படிதான் இந்த மோசடியும் நடந்திருப்பதாக தெரிகிறது
பொதுவாக இப்படியான நிலத்தை பற்றி விசாரிக்கும் போது, யுடிஆர் நிலமா, நத்தம் நிலமா, மந்தை நிலமா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர் பதில் அளித்துள்ளனர். சர்வே நம்பர் தான் மிகவும் முக்கியம்.. சர்வே நம்பவர் செல்லாது என்று வந்தால், அந்த இடம் அரசாங்க நிலமாக இருக்கலாம், எனவே அது தெரியாமல் அட்வான்ஸ் போடாதீங்க என்று கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் நிபுணர் ஒருவர் கூறுகையில், "நிலம் வாங்குவதற்கு முன்பே அந்த நிலத்தின் சர்வே எண், பட்டா விவரம், உரிமையாளர் பெயர், வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்க வாங்குபவருக்கு முழு உரிமை உள்ளது. எனவே பட்டா நம்பர் வாங்குவதற்கு ஒரு ரூபாய்கூட அட்வான்ஸ் கொடுக்க கூடாது.
இதில் சந்தேகப்பட வேண்டிய விவரங்கள்
1. சர்வே நம்பர் தந்துள்ளார்கள். ஆனால் பட்டா எண் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
2. வெப்சைட்டில் சர்வே நம்பரை டைப் செய்தால் Invalid Survey Number என வருகிறது.
3. பட்டா விவரம் பெறுவதற்கு ₹2 லட்சம் முன்பணம் கேட்கிறார்கள்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை பட்டா தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்காமல் பணம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.
என்ன செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கீழ்க்கண்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்
தமிழ்நாடு நில ஆவணங்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போய், பட்டா / சிட்டா / FMB / A-Register விரங்களை சரிபார்க்க வேண்டும்.
சரிபார்க்க வேண்டியவை
- பட்டாதாரர் பெயர்
- சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்
- நிலத்தின் பரப்பளவு
- நிலத்தின் வகைப்பாடு
- FMB வரைபடம்
சர்வே எண்ணை மட்டும் உள்ளீடு செய்தால் போதாது. மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். பழைய சர்வே எண் மறுசீரமைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த நிலத்தை விற்பனை செய்பவரிடம் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கேட்க வேண்டும்.
1. தற்போதைய பட்டா நகல்.
2. மூலப் பத்திரம் மற்றும் தாய்ப்பத்திரங்கள்.
3. வில்லங்கச் சான்றிதழ் (EC).
4. A-Register நகல்.
5. FMB வரைபடம்.
இவற்றைச் சொத்து வழக்கறிஞர் மூலம் சரிபார்த்த பிறகே முன்பணம் கொடுக்க வேண்டும். பட்டா விவரம் காட்டுவதற்கு ₹2 லட்சம் முன்பணம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கண்டிசனே கிடையாது. ஆவணங்களை முதலில் காட்டுங்கள்; சரிபார்த்த பிறகு தான் அட்வான்ஸ் பற்றிப் பேச முடியும் என்று பேச வேண்டும்" இவ்வாறு பொருளாதார நிபுணர் கூறினார்.




Click it and Unblock the Notifications
