அன்பில் மகேஷ் வழக்கில் ‘ட்விஸ்ட்’.. விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி அருள் முருகன் விலகல்!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜி.அருள்முருகன் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ முத்துக்குமார், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வாங்கியிருப்பது என்பது கடுமையான குற்றச்சாட்டாகும். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில், மாநில அரசின் விசாரணை நியாயமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.
புதிதாக தவெக அரசு பதவியேற்ற 7 வாரங்களில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட நபர்கள் அல்லது இந்த விவகாரத்தில் அரசியல் தாக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதற்கு தானே சாட்சி என தமிழக நிதி அமைச்சர் சட்டப்பேவையில் பேசியுள்ளார். எனவே, அவரிடமும் இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி அருள்முருகன் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வேறொரு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
