அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.. துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதி உத்தரவு!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி. அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா், காா் ஓட்டுநா் சரவணன் உள்ளிட்டோா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இதனிடையே மீண்டும் அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரியது. அந்த மனுவில், பணம் வசூலித்தது யார்? தனியார் பள்ளிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? வசூலிக்கப்பட்ட பணம் யாரை சென்றடைந்தது? என்பது குறித்து மூவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவர்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை விசாரிக்கவும் விசார்ணையின்போது அன்பில் மகேஷ் உள்ளிட்ட மூவரையும் உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
