பெங்களூர் ஐடி ஊழியர்கள் ஹேப்பி.. கேஆர் புரம் - சில்க் போர்டு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
பெங்களூர்: பெங்களூரில் ஐடி ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த கேஆர் புரம் - சென்ட்ரல் சில்க் போர்டு இடையே 19.75 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. இதன்மூலம் 2027 ம் ஆண்டில் இருந்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று பெங்களூர நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறினார்.

பெங்களூரில் தற்போது 103 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. மேலும் தொடர்ந்து மெட்ரோ ரயில் பணிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் பெங்களூர் நீலவழித்தட (Bengaluru Metro Blue Line) மெட்ரோ ரயில் சேவையாகும்.
இந்த வழித்தடத்தின் நோக்கம் என்பது பெங்களூர் சென்ட்ரல் சில்க் போர்ட்டில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதாகும். இதன் மொத்தம் தொலைவு வரை 58.19 கிலோமீட்டராகும்.
சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து எச்எஸ்ஆர் லேஅவுட், பெல்லந்தூர், காடுபீசனஹள்ளி, மாரத்தஹள்ளி, இஸ்ரேல், தொட்டனகுந்தி, கேஆர் புரம், ஹொரமாவு, எச்ஆர்பிஆர் லேஅவுட், எச்பிஆர் லேஅவுட், நாகவாரா, கெம்பாபுரா, கொடிகேஹள்ளி, சிக்கஜாலா, விமான நிலையம் வரை இந்த வழித்தடம் செல்கிறது.
தற்போது பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தான் ஏராளமான ஐடி நிறுவனங்கள், முக்கிய தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த திட்டத்தை விரைந்து அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அதன்படி முதற்கட்டமாக கேஆர் புரத்தில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழிப்பாதையின் தொலைவு 19.6 கிலோமீட்டராகும். இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக கேஆர் புரம் - சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான வழித்தடத்தில் முதல் 4 ரயில் நிலையங்களுக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.

நேற்று தொடங்கிய சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில், கேஆர்புரம், சரஸ்வதி நகர் (மகாதேவபுரா), டிஆர்டிஓ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், தொட்டனகுந்தி வரை சென்று வந்தது. வரும் வாரங்களில் மீதமுள்ள ஸ்டேஷன்களுக்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நீட்டிக்கப்பட உள்ளது. நேற்று நடந்த மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியதாவது: ''நீல நிற வழித்தடத்தில் கேஆர்புரம் - சென்ட்ரல் சில்க் போர்டு இடையே மொத்தம் 39.2 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்டவாளம் (வழித்தடத்தில் போக 19.6 கிமீ., வருவதற்கு 19.6 கிமீ) அமைக்க வேண்டும். இதில் இதில் 37.1 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தானியங்கி சிக்னல் சிஸ்டம் பொருத்தும் பணி அடுத்த 2 முதல் 3 மாதங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு பாதுகாப்பு சான்றிதழ் (Safety Certificate) பெறுவதற்கான கட்டாய நடைமுறை மேற்கொள்ளப்படும். இதில் சிக்னல் சிஸ்டம் பொருத்து பணி ஜனவரி மாதத்திலும், பாதுகாப்பு சான்று பெறும் செயல்முறை பிப்ரவரி மாதத்திற்கும் பிறகும் தொடங்கும். இந்த நடைமுறைகளின்படி பார்த்தால் இந்த நீல நிற மெட்ரோ வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தறிக்க இன்னம் 7 முதல் 8 மாதங்கள் வரை ஆகும்'' என்றார்.
இது பெங்களூரில் சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர் புரம் இடையேயான பகுதிகளில் பணியாற்றும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு ஹேப்பி செய்தியாகும். ஏனென்றால் தற்போது அவர்கள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இல்லாமல் 'அவுட்டோர் ரிங் ரோடு' பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும்போது அவர்களால் விரைவாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமலும் தங்களின் அலுவலகத்துக்கு சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
