உத்தரவை மதித்த தமிழக அரசு.. தீபம் ஏற்றாதது ஏன்? சாமர்த்தியமான நகர்வா? விடை தெரியாத கேள்விகள்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் நேற்று தீபம் ஏற்றவில்லை. இத்தனைக்கும் உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உறுதியாக நடப்போம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி அளித்தார். ஆனால் தீபம் குறிப்பிட்ட இடத்தில் ஏற்றப்படவில்லை.. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த விளக்கத்தை வைத்தே சில கேள்விகளை இந்து அமைப்பின் ஆர்வலர்கள் முன் வைத்துள்ளார்கள். அது பற்றி பார்ப்பாம்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை மதித்தாக கூறினாலும் தீபம் ஏற்றாதது ஏன் என இந்து அமைப்பின் ஆர்வலர்கள் சிலர் வைத்த கேள்விகளை பார்ப்போம். தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் , உச்சநீதிமன்ற உத்தரவை மதித்ததாகவும், தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் செய்த ஏற்பாடுகள், நடைமுறையில் தீபம் ஏற்றப்படுவதற்கு வழிவகுக்கவில்லை.

மாற்று ஏற்பாடுகள்
மாவட்ட ஆட்சியிரின் மனுவில் குறிப்பிட்ட படி, மாலை 5.03 மணிக்குத்தான் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதா? அதற்கு முன்பே ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியாதா? என்ற கேள்விகளை சில இந்து ஆர்வலர்கள் முன் வைக்கிறார்கள். மேலும் 6 மணி முதல் 6.30 மணி வரை மட்டுமே ஏன் நேரம் ஒதுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி உள்ள அவர்கள், - அங்கீகரிக்கப்பட்ட குழு வரவில்லை என்றால், மாற்று ஏற்பாடு செய்ய முயற்சி செய்யப்பட்டதா? என்று கேட்டுள்ளனர்.
பொறுப்பிலிருந்து விலக முடியுமா
எனினும் காலநீட்டிப்பு கேட்கப்படவில்லை என்று கூறும் மதுரை மாவட்ட நிர்வாகம், தீபம் ஏற்றப்படுவதை உறுதிப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதேபோல் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது மட்டும்தானே மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கோயில் நிர்வாகத்தின் முடிவைச் சுட்டிக்காட்டி பொறுப்பிலிருந்து விலக முடியுமா என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தவெக தரப்பு வாதம்
அதேநேரத்தில், கோயிலின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் அறங்காவலர் குழுவின் முடிவுகளையும் ஒதுக்கிவிட முடியாது என்பது தவெக அரசு தரப்பு ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது. எனினும் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்பதாக கூறிய அரசு, அந்த உத்தரவை ஏன் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று கேள்விகள் எழுகிறது. தீபம் ஏற்றப்படாததற்கு யார் பொறுப்பு, அரசுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருந்தது, அவை ஏன் குறிப்பிட்ட சமயத்தில் உடனடியாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு நீதிமன்ற விசாரணைக்கு பின் தெளிவாக தெரிய வரும்.
திருப்பரங்குன்றம் மக்களின் விருப்பம்
மத ரீதியாக விவகாரம் என்பதால், எந்த தரப்புக்கு சாதகமாக இல்லாமல், நீதிமன்ற உத்தரவுக்கும் கோயில் மரபுகளுக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே அவசியம் என்று பொதுவெளியில் பலர் கூறுகிறார்கள். அதேபோல் திருப்பரங்குன்ற விவகாரம் அரசியல் மோதலாக இல்லாமல், சட்டரீதியாகவும், இருதரப்பினரும் அமர்ந்து பேசிய அமைதியான முறையிலும் முடிவுக்கு வர வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




Click it and Unblock the Notifications
