"இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை"! நடிகை Trisha-வுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கண்டனம்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் "புரட்சித் தலைவி" என்ற பட்டத்தை யாரும் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவரது அண்ணன் மகள் தீபா எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை திரிஷா பெயரில் "இளைய புரட்சித் தலைவர் திரிஷா பேரவை" தொடங்கப்பட்டதை சுட்டிக் காட்டி தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசும், அண்ணன் மகளுமான தீபா ஜெயகுமார் ஆகிய நான், "புரட்சித் தலைவி அம்மா"வின் பட்டத்தை யார் பயன்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி ஒரே ஒரு "புரட்சித் தலைவி" மட்டும்தான்; அவருடைய வாரிசு என்ற முறையில் அவரது பட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். மேலும், எனது அத்தையும் முன்னாள் முதலமைச்சருமான அவரை, வெறும் பிரபலங்கள் என்ற ஒரே காரணத்திற்காகச் சமகால நடிகைகள் யாருடனும் தேவையின்றி ஒப்பிடுவதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தீபா கண்டிப்பு
இத்தகைய செயல்களால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மிகுந்த மனவேதனையடைந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வெற்றிப் பாதையைப் பின்பற்ற விரும்பும் எவரும், கடின உழைப்பாலும் உண்மையாலும் அதை அடைய வேண்டுமே தவிர, அவரைப் போல நகலெடுக்கவோ அல்லது அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தவோ இத்தகைய தரம் தாழ்ந்த வழிகளில் முயற்சிக்கக் கூடாது.
அவரது வாரிசு, அண்ணன் மகள் மற்றும் குடும்பத்தினர் என்ற முறையில் நான் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்; தேவைப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு தீபா தெரிவித்துள்ளார்.
திரிஷா பேரவை
நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற புதிய நற்பணி இயக்கம் கடந்த 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதற்கான லோகோ வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் இந்தப் பேரவையைத் தொடங்கியுள்ளார்.

நெல்லையில் சாமி படம்
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சாமி திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்த கதாபாத்திரம், தைரியமும், துணிச்சலும் நிறைந்த திருநெல்வேலி பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு ராஜகோபாலுக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய நிலையில், திரிஷாவின் ரசிகராக இருந்து வந்த அவர், அவரது பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி மக்கள் நலப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
நலப்பணிகளை செய்யும் ராஜகோபால்
ரசிகர் மன்றமாக மட்டுமின்றி, தொண்டு மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு நலப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட லோகோவில் நடிகை திரிஷாவின் புகைப்படத்துடன் 'பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!!' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
தொழிலதிபர் ராஜகோபால் ஏற்கனவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் தொடர்பில் இருந்து வருகிறார்.

திரிஷா
இதுகுறித்து ராஜகோபால் கூறியிருப்பதாவது: "வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்டவைகளை எங்களது அமைப்பின் தலைவி திரிஷாதான் முடிவு செய்ய வேண்டும். எங்களது எதிர்பார்ப்பு தேர்தலில் நின்று போட்டியிட்டால் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்ய முடியும் என்பதே ஆகும்.
தவெக
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டால் மக்களுக்கான திட்டங்களை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனையே நாங்கள் வலியுறுத்த உள்ளோம்" என ராஜகோபால் தெரிவித்திருந்தார்.




Click it and Unblock the Notifications
