விடாத ராமரவிக்குமார்.. தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக தொடர உச்சநீதிமன்றம் இன்று மறுத்தது. அதேவேளையில் அவமதிப்பு வழக்கு தொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இந்துத்துவா அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை தமிழக அரசு பின்பற்றவில்லை என்பது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த சமயத்தில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜாரானார். அப்போது அவர் ''திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றியது தொடர்பாக நிலை அறிக்கை (Status Report) தாக்கல் செய்கிறோம். இதற்கான அறிக்கை இப்போது தான் வந்தது. கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. அதுபற்றிய விஷயங்களை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கு நீதிபதி அரவிந்த் குமார், ''உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றிய 3 நாட்களுக்கு பிறகு தான் கலெக்டரிடம் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம்'' என்றார். அதற்கு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ''தீபம் ஏற்றப்படவில்லை என்ற விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே கலெக்டர் தானாக முன்வந்து நடந்த விஷயத்தை கவனத்திற்குக் கொண்டு வருவது சிறந்தது என்று கருதினோம். குறிப்பாக, தீபம் ஏற்றப்படவில்லை என்ற விஷயத்தை எதிர் தரப்பினர் நிச்சயம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவார்கள் என்பதால், நாமே முன்கூட்டியே நீதிமன்றத்திடம் தெரிவிப்பது நல்லது என்று கருதினோம்'' என்றார்.
அதேபோல் இந்துத்துவாக அமைப்பின் சார்பில் மூல மனுதாரரான ராமரவிக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ''கலெக்டரின் இந்த செயல் என்பது நீதிமன்ற அவமதிப்பு நடக்கலாம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து செய்தது போல் உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறியும் தூணில் தீபம் ஏற்றாமல் போனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கோவில் அறங்காவலர் குழு பெயரில் வெளியான அறிக்கையில் 'தீபத்தூண்' பகுதியில் சடங்குகளை செய்ய மரபு இடமளிக்கவில்லை.
இதனால் 'உச்சிப்பிள்ளையார்' கோவிலிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.ஆனால், தாங்கள் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை என்று கோவில் பணியாளர்கள் மறுத்துவிட்டனர். இது நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே பின்பற்றாமல் இருப்பதற்கான முயற்சி. தந்திரமான வழிகளை கையாண்டு அவர்கள் இதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது சட்டத்தின் ஆட்சியை முழுமையாக மீறும் செயலாகும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக கடைசி நிமிடம் வரை உயர் நீதிமன்றத்திடம் கூறிவிட்டு, இறுதியில் அதை செய்ய மறுத்துவிட்டனர். தற்போது உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் தீபத்தூண் பகுதிக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். மேலும் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்'' என்றார்.
ஆனால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய மறுத்தது. தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ராமரவிக்குமார் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் சார்பில் மதியம் 12.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.




Click it and Unblock the Notifications
