திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? தேவஸ்தானம் மீது பழிபோட்ட மதுரை கலெக்டர் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. ஆனால் உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு முடிவெடுத்தால் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்று மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை நாளான நேற்று தீபம் ஏற்ற கடந்த 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.
ஆனால் நேற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம்போல் மலையின் மீதுள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தான் இன்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணை நடந்தது. இதுதொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிவிட்டு அதுதொடர்பான அறிக்கையை 3 நாட்களில் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:
''தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு யாரை அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் கடைசிவரை கலெக்டருக்கு எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவும் வரவில்லை. வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே தீபம் ஏற்ற அறங்காவலர் குழு முடிவெடுத்தால் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை
ஆனால் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அன்று முதல் நேற்று மாலை வரை கலெக்டர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் வரம்பிற்குட்பட்டு தொடர்ந்து நல்ல எண்ணத்துடன் செயல்பட்டார்.
கலெக்டருக்குவழங்கப்பட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். மொத்தம் மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டன; மூன்றாவது கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவில் உள்ள ஒவ்வொரு அறிவுறுத்தலும் தனித்தனியாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான குழு அமைப்பு மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, நேரம், செல்லும் பாதை மற்றும் கால அளவு, அனுமதிச் சீட்டு முறை, பார்வையாளர்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் அனைத்தும் செயல் அலுவலர் , இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மற்றும் காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டன.
இந்த முடிவுகள் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டது. பங்கேற்ற அதிகாரிகளிடம் கையெழுத்தும் வாங்கப்பட்டது. மேலும் அனைத்தும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் முறையாக தெரிவிக்கப்பட்டதோடு, இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நவம்பர் 24 (நேற்று) காவல் ஆணையருடன் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆலோசித்தேன். நேரில் சென்று களத்தைப் பார்வையிட்டபோது, பார்வையாளர்கள், நிர்வாக நடுவர்கள் (Executive Magistrates) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருப்பதை உறுதி செய்தேன். மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் தொலைபேசி மற்றும் பிற அதிகாரப்பூர்வ வழிகள் வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்தது'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை நான் முறையாக பின்பற்றினேன். ஆனால் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் தான் தீபம் ஏற்றுவதை நிறைவேற்றவில்லை என்று மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பழிபோட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
