மாதா சிலை கன்னத்தில் வடிந்த திரவம்.. ஏற்கனவே கையில் வடிந்த ரத்தம்.. தமிழகத்தில் ஆச்சரிய சம்பவங்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே வீட்டில் வைத்து வழிபட்டு வந்த மாதா சிலையின் கன்னத்தில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த சிலையைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆலயத்தில் குவிந்து வருகிறார்கள்.. இதேபோல தமிழகத்தின் மற்றொரு பகுதியில் மாதா சிலையில் இருந்து ரத்தம் போன்ற திரவம் வடிந்ததாக முன்பு வெளியான சம்பவமும் தற்போது சோஷியல் மீடியாவில் நினைவுகூரப்படுகிறது.
பழவேற்காடு அருகே உள்ள நடுவூர் மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜன், சகாயமேரி தம்பதியர். இவர்கள் தங்கள் வீட்டில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மாதா சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் அந்த சிலையின் கன்னப் பகுதியில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிவதை பார்த்து திகைத்து போய் நின்றுள்ளனர்.. உடனே சிலையை அருகில் உள்ள மகிமை மாதா ஆலயத்தில் ஒப்படைத்துள்ளனர்..
பழவேற்காடு மாதா சிலை
மாதா சிலையின் கன்னத்திலிருந்து திரவம் வடிவதாக வெளியான தகவல் நடுவூர் மாதா குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து ஏராளமான மக்கள் மகிமை மாதா ஆலயத்திற்கு செல்ல தொடங்கினர். ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். பலர் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.
இதனிடையே, பங்குத் தந்தை பாதிரியார் ரொசாரியா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் ஆலயத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.. மாதாவை பார்க்க பலரும் முண்டியடித்து வரும் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவம்
இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூரிலும் சமீபத்தில் பேசுபொருளாகியிருந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இயேசுவின் திரு இருதய ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஜாயின் பிரிட்டோ, கடந்த 2022-ம் ஆண்டு கனடாவில் இருந்து சுமார் 2 அடி உயரமுள்ள மாதா சிலையை வாங்கி வந்துள்ளார். கையில் இருதயத்தை தாங்கிய நிலையில் இருந்த அந்த சிலைக்கு "திரு இருதய அன்பின் சுடர் அன்னை மரியா" என்று பெயரிடப்பட்டது.
இந்தியாவுக்கு முதன்முதலாகக் கொண்டுவரப்பட்ட இருதயம் தாங்கிய அன்னையின் சொரூபம் இது என்பதால், மிகவும் பிரபலமாக பேசப்பட்ட சிலை இதுவாகும்.. அந்த ஆலயத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளேயே இந்த சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
கையில் ரத்தம் போன்ற திரவம்
ஒருநாள் காலையில் ஆலயத்திற்கு வந்த பெண் ஒருவர் மாதா சிலையை வழிபட்டபோது, சிலையின் கையிலிருந்த இருதயப் பகுதியில் இருந்து ரத்தம் போன்ற திரவம் வடிந்திருப்பதை கவனித்துள்ளார். மேலும் சிலையின் கைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்ததையும் பார்த்துள்ளார். இதுகுறித்து ஆலய நிர்வாகிகளிடம் தகவல் சொல்லி உள்ளார்..
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இந்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரவியதும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்து சிலையை பார்த்து சென்றனர். சிலையில் ஏற்பட்ட மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று புரியாமல் பலரும் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து மக்கள் வருகை அதிகரித்ததால் ஆலயத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதா சிலையின் கையில் ரத்தம் போன்ற திரவம் காணப்பட்டதாக வெளியான பழைய தகவலைத் தொடர்ந்து, இப்போது பழவேற்காடு அருகே மாதா சிலையின் கன்னத்தில் எண்ணெய் போன்ற திரவம் வடிவதாகக் கூறப்படும் சம்பவமும் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது...!!


Click it and Unblock the Notifications
