கள்ளக்குறிச்சி.. தலைமைச் செயலாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.. உதயநிதி வைத்த ட்விஸ்ட்
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை மறைக்க முயன்ற தலைமைச் செயலாளரையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து டிஜிபி-யிடம் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆளும் தவெக அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டியின் முக்கிய அம்சங்கள்
கடந்த ஜூலை மாதமே பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் எடுத்துக் கூறினாரா?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சர்ச்சையை மூடிமறைக்கத் தலைமைச் செயலாளர் முயற்சி செய்துள்ளார். எனவே, தலைமைச் செயலாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவரை இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.
புகார் அளித்த பெண் அதிகாரியிடம், 'பணியிட மாறுதல் வேண்டுமா?' என உயரதிகாரிகள் கேட்டுள்ளனர். புகார் எழுப்பப்பட்டு 116 நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தவறு செய்தவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட நபரைப் பற்றியே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் நடந்த இந்தச் சம்பவம் போல் இதுவரை எங்கும் நடந்ததில்லை.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் மட்டுமின்றி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றமே தலையிட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் அவரை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
வழக்கின் தற்போதைய நிலை
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடமிருந்து திங்கட்கிழமை பிற்பகலில் எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்ட உடனேயே எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவின் பேரில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜி என். காமினி மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒருபுறம் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்து, தலைமைச் செயலாளர் மற்றும் துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
