நீ என்ன ஒழுங்கான்னு.. எம்எல்ஏ திருப்பி கேப்பாருன்னு விஜய்க்கு பயம்.. ஒரே அடியாக போட்ட உதயநிதி
சென்னை: நீ என்ன ஒழுங்கான்னு எம்எல்ஏ திருப்பி கேப்பாருன்னு விஜய்க்கு பயம்.. அதனாலதான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது விஜய் இதுவரை ஆக்சன் எடுக்கவில்லை.. என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை மறைக்க முயன்ற தலைமைச் செயலாளரையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து டிஜிபி-யிடம் புகார் மனு அளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஏன் 116 நாட்களா இன்னைக்கு வரைக்கும் வாயைத் திறக்காம இருக்காரு? அவருக்கு பயம் இருக்கலாம் .. ஒருவேளை விஜய் சட்டமன்ற உறுப்பினர்களைக் கூப்பிட்டு கேள்வி கேட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் 'நீங்க என்ன ஒழுங்கான்னு' முதலமைச்சரைப் பார்த்துக் கேட்டுடலாம்ல? சோ அதனால விஜய் ஆக்சன் எடுக்காமல்.. தவறை கேட்காம இருக்கலாம். ஆனா தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் பாத்துகிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட சம்பவமே நடக்கலன்னு சில அமைச்சர்கள் முட்டுக்கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப அவங்க எல்லாம் என்ன பதில் சொல்லப்போறாங்க?
அதே மாதிரி இன்னொரு சம்பவம், சில பேரு பார்த்தோம்.. துணை சபாநாயகர் திரு ரவிசங்கர் அவர்கள் தன்னுடைய வீட்டுக்கு மனு கொடுக்க வந்தவரை கண்ணா பின்னான்னு அடிச்சு அந்த வீடியோ வைரலாகி, உடனே விடிய விடிய நடுராத்திரியில அவரைக் கூப்பிட்டு உட்கார வச்சு, அவருக்குத் திருப்பி அடிபடாதபடி மேக்கப் எல்லாம் போட்டு, அவர் பக்கத்துல உட்கார வச்சு, இவர் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு ரெண்டு பேரும் நண்பர்கள் மாதிரி பேசின வீடியோவும் வெளிய வந்ததே.
அதன்பிறகு திருப்பி இரண்டு மூணு மணி நேரத்தில அவர் மீண்டும் என்ன 'இந்த மாதிரி கூப்பிட்டு மிரட்டி வீடியோ எடுத்துட்டாங்க, துணை சபாநாயகர் என்னை அடிச்சது உண்மை' அப்படின்னு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சம்பவம் நடந்து இதுவரைக்கும் 16 நாட்கள் ஆகுது. அதன் மேலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படல. எனவே துணை சபாநாயகர் மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்னு புகார் மனு கொடுத்திருக்கிறோம்.
கடந்த ஜூலை மாதமே பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இந்தப் புகார் தொடர்பாக முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் எடுத்துக் கூறினாரா? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சர்ச்சையை மூடிமறைக்கத் தலைமைச் செயலாளர் முயற்சி செய்துள்ளார். எனவே, தலைமைச் செயலாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவரை இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்.
புகார் அளித்த பெண் அதிகாரியிடம், 'பணியிட மாறுதல் வேண்டுமா?' என உயரதிகாரிகள் கேட்டுள்ளனர். புகார் எழுப்பப்பட்டு 116 நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவறு செய்தவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட நபரைப் பற்றியே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் நடந்த இந்தச் சம்பவம் போல் இதுவரை எங்கும் நடந்ததில்லை.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் மட்டுமின்றி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி-யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
