அதிமுக தலைமை அனுமதி இன்றி பொதுவெளியில் பேசக்கூடாது - எடப்பாடி போட்ட ஆர்டர்.. வேலுமணி தரப்புக்கு செக்
சென்னை: அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் யாரும் பேட்டி அளிக்கவோ, கருத்து வெளியிடவோ கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அண்மையில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து எஸ்.பி.வேலுமணி அறிக்கை, நத்தம் விஸ்வநாதன் பேட்டி அளித்திருந்த நிலையில், இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மீண்டும் கட்சிக்குள் பூசல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தொண்டன் முடிவெடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என வேலுமணி பதிலடி கொடுத்தார். டிசம்பரில் நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பாக வெடித்துள்ள இந்த மோதல், கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது அதிமுக வட்டாரத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இந்தச் சூழலில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளின் கவனத்திற்கு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக பீடுநடைபோட்டு வருகிறது.
அந்த வகையில் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், அழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து, கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று, அதன்பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் வேண்டும்.
அதேபோல், அறிக்கை ஏதேனும் வெளியீடுவதாக இருந்தால், கண்டிப்பாக தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். கழக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும். கழகத் தலைமையின் இந்த உத்தாவை முழுமையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
