மேகதாது உபரி நீர் சேமிப்பு ஓகே.. தமிழகத்துக்கு மட்டும் எதிர்ப்பு? கர்நாடகா இரட்டை நிலைப்பாடு ஏன்?
டெல்லி: ஒருபுறம் காவிரியின் உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து,அதனை பெங்களூருவின் குடிநீருக்கும், தமிழகத்தின் குடிநீருக்கும் பயன்படுத்தலாம் என்று கர்நாடகா அரசு மேகதாது அணைக்காக நியாயம் கேட்கிறது. ஆனால் மறுபுறம் காவிரியின் உபரி நீரை பயன்படுத்தும் காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது கர்நாடகா அரசு.இதுபற்றி பார்ப்போம்.
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்கும் கர்நாடகா அரசு , காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. அந்தமனுவில், "காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக மேட்டூர் அணையில் சுமார் 8.60 டி.எம்.சி. உபரி நீரை தமிழ்நாடு கணக்கிட்டுள்ளது. தன் நிலப்பகுதியில் இருந்து உருவாகும் உபரி நீரை தன்னிச்சையாக பயன்படுத்துவது பிற்காலத்தில் உரிமை கோர பயன்படுத்தப்படலாம். இதனால் காவிரி உபரி நீர் மீதான கர்நாடகாவின் உரிமைகள் பாதிக்கப்படும்.

தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் நீரை எதிர்பார்த்து தமிழ்நாடு முன்வைக்கும் வாதமும் இனி செல்லுபடியாகாது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் விரிவான திட்ட அறிக்கையின்படி, கோதாவரி (இச்சம்பள்ளி) காவிரி இணைப்புத் திட்டம் காவிரி படுகைக்கு முன்பே முடிவடைகிறது. தமிழ்நாட்டுக்கு முன் மொழியப்பட்ட நீர் ஒதுக்கீடு 83.27 டி.எம்.சி.யில் இருந்து 40.93 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு தடை விதிப்பதோடு, மேட்டூரில் இருந்து சரபங்கா துணைப் படுகைக்கு வெள்ள நீரைக் கொண்டு செல்வது, மாயனூரில் புதிய கட்டளைத் தடுப்பணை கட்டுவது, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டுவது உள்ளிட்ட பிற திட்டங்களின் கீழ் தமிழ்நாடு அல்லாத பிற பகுதிகளின் காவிரி நீரைத் திருப்பி விடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளது.
காவிரியில் வரும் உபரி நீரை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது என்றும் வாதிடும் கர்நாடகா அரசுவின் மனு டிசம்பர் 10-12 தேதிகளுக்குள் விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது. எனினும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நீரை, சட்டப்படி பயன்படுத்தக்கூடிய உபரி நீரையும் கர்நாடகா தடுக்க முடியாது என்றாலும், உபரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்குமே ஒரு பொதுவான விவாதம் இருக்கிறது. கர்நாடகா உபரி நீரைச் சேமிக்கலாம் என்று மேகதாது அணையை கட்ட விரும்புகிறது, தமிழ்நாடு உபரி நீரைத் தனது வறட்சிப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறது. இது தான் விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
