வேண்டாம்..வேண்டாம்.. தடுத்த நடிகர் சிவக்குமார்! வலுக்கட்டாயமாக சாதித்த வைகோ! மேடையில் சிரிப்பலை!
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பொன்னாடை வேண்டாம் என நடிகர் சிவக்குமார் தடுத்த போது அதை வலுக்கட்டாயமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அணிவித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆற்றிய உரையின் தொகுப்பானது "வைகோ இன் பார்லிமெண்ட் (Vaiko in Parliament)" என்ற நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதமே நடைபெற்றுவிட்ட நிலையில் தற்போது மறுவெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடந்தது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த மார்க்கண்டேயன் சிவக்குமாருக்கு வைகோ பொன்னாடை அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வைகோ பொன்னாடையை அணிவிக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த கலகலப்பான உரையாடலும் பொன்னாடை அணிவிக்கும் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கில் இருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. சிவக்குமாரும் வைகோவும் இருவரும் உரிமையாக பழகி கொள்வார்கள்.
கலைத் துறை, அரசியல் என இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் தமிழ் மொழி மீது இருவரும் கொண்டுள்ள பற்று இவர்களை இணைத்துள்ளது என சொல்லலாம். சிவக்குமாருக்கு வைகோவுடன் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருடனும் நட்புறவு உள்ளது.

1998 ஆம் ஆண்டு வைகோ மகன் துரை வைகோ திருமணத்தில் கூட நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டிருந்தார். தமிழ் பற்றாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருடன் சிவக்குமாருடன் நெருக்கம் அதிகம்.
நடிகர் சிவக்குமார் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறந்த ஓவியர்! சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவரது ஓவியங்கள் பல கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர், இலக்கிய சொற்பொழிவாளராக இருந்து வருகிறார். கம்பராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும், உலகப்பொதுமறை திருக்குறளிலும் மனப்பாடமாக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசும் திறன் கொண்டவர். எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாத சிவக்குமார், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். தினந்தோறும் யோகா பயிற்சிகளை செய்து தனது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். இளைஞர்களுக்கும் உணவு கட்டுப்பாட்டு, உடற்பயிற்சி, யோகாவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.



Click it and Unblock the Notifications
