கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் அழுத்தம் வந்ததா? டிஜிபி கொடுத்த ரியாக்சன்
சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ என்பதால் அவர் மீதான வழக்கில் அழுத்தம் வந்ததா? என்பது குறித்த கேள்விக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பதிலளித்துள்ளார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் அடிபட்ட நிலையில், திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரத்தை கையில் எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்பி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் புகாரை எழுத்துப்பூர்வமாக பெற்றார்.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள் விக்னேஷ் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி சம்மன் அனுப்பியிருந்தார். கச்சிராயப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சம்மன் அளித்திருந்தார். இதற்கிடையே, விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்துள்ளார்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற அவரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அருள் விக்னேஷ்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எம்.எல்.ஏ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விதிகளின்படி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன் தினம் தான் புகார் அளிக்கப்பட்டது. புகார் வந்ததவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐஜி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவ் வேண்டுமோ அதை எடுப்பார்கள்" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
