3 முறை சமாதானம் பேசிய கேபி முனுசாமி.. இறங்கி வராத எஸ்பி வேலுமணி.. அதிமுகவில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் சமாதான போக்கிற்கு வந்துவிட்டதாக சொல்லப்பட்ட சூழலில், திடீரென மீண்டும் மோதல் உருவாகி இருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் இருவருமே, நாங்கள் அதிமுகவில் தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர்.. பொதுக்குழுவை கூட்டம் வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.. தோல்வியில் இருந்து அதிமுக மீண்டு வர வேண்டும் என்று பேசி இருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி vs எஸ்பி வேலுமணி
இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் இருவரும் சமாதானமாக போக முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, 2 கோடி அதிமுக தொண்டர்களில் ஒருவர் தான் எஸ்பி வேலுமணி என்று கடுகடுத்தார். இதற்கு எஸ்பி வேலுமணி, தொண்டர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று பதிலடி கொடுத்தார்.
சமாதானம் செய்ய முயன்ற கேபி முனுசாமி
இந்த விவகாரத்திற்கு பின் மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனிடையே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பை சமாதானப்படுத்த கேபி முனுசாமி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முதல் 2 முறை எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் இருவரும் பெரிதாக பிடி கொடுக்கவில்லை. அப்போது டெல்லி மூலமாக எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து வெளியேற்ற காய் நகர்த்தி இருக்கின்றனர்.
எஸ்பி வேலுமணி கொடுத்த அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து 3வது முறையாக கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்காக பேச வரவில்லை.. அதிமுக என்ற கட்சிக்காக பேச வந்துள்ளேன் என்று பேசி இருக்கிறார். அப்போது எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு, நாங்களும் கட்சிக்காக தான் பேசுகிறோம்.. நீங்களும் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று பேசி இருக்கின்றனர். இது கேபி முனுசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டெல்லியில் நடந்த சந்திப்பு
எஸ்பி வேலுமணி மீதான ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்தித்த எஸ்பி வேலுமணி, அதிமுக தலைமை தொடர்பாகவும் பேசி இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தங்கமணி செய்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
காய் நகர்த்திய தங்கமணி
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் இருக்கும் தொடர்பு மூலமாக தங்கமணி இந்த ஏற்பாடுகளை செய்ததாக பேசப்படுகிறது. இதன் காரணமாகவே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் தங்கமணி ஆகியோர் மீதான கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு குறையவில்லை. இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்தை எட்டும் என்றும் கருதப்படுகிறது.




Click it and Unblock the Notifications
