'நீ என்ன ஒழுங்கா என திருப்பி கேட்பார்' என்ற உதயநிதி மீது தவெக கடும் தாக்கு
சென்னை: 'நீ என்ன ஒழுங்கா என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விஜய்யை பார்த்து திருப்பி கேட்பார் என்ற பயம் இருக்குமோ, என்னவோ 'என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு தவெக ஐடி விங்க் கடுமையான மொழியில் பதிலடி கொடுத்து உள்ளது
அருள் விக்னேஷை கைதுசெய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-யிடம் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று புகார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நாம் சொன்ன அந்த 'ஹனிமூன் பீரியட்' என்ற வார்த்தையை இந்தச் சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சரும் அதன் நேரடி அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டு செயல்பட்டுவிட்டார்கள் போலும். ஜூலை மாதம் 31-ம் தேதியிலிருந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்துத் தொடர்ந்து பத்திரிகையாளர்களும், சமூக வலைதளங்களில் பலரும் எழுத ஆரம்பித்தார்கள். எங்களுடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இந்தச் செய்தியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார். ஆனால், பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இது குறித்துக் கேட்கும்போது, சம்பந்தமே இல்லாமல் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஓர் அமைச்சர், தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான பதில்களையே அளித்துள்ளார்.

நேற்று உயர்நீதிமன்றம் தலையிட்டதால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது தவெக அரசு. இதற்குக் கூட 116 நாள்கள் ஆகியுள்ளது. இந்த 116 நாள்களாகச் சட்டம்-ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் இந்த முதலமைச்சர் விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா? அதுமட்டுமல்லாமல், இந்தக் குற்றச்சாட்டு வெளியே வந்ததிலிருந்து 'விர்ச்சுவல் வாரியர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற ஆன்லைன் வன்முறையாளர்கள், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரியையே தாக்கித் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்று நான் டி.ஜி.பி அவர்களிடம் அளித்துள்ள புகார் மனுவில், ஜூலை 31-ஆம் தேதியே புகார் கொடுக்கப்பட்டும் அதனை மூடி மறைக்க முயற்சி செய்த தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளேன்.
தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தை முதலமைச்சரிடம் தெரிவித்தாரா, இல்லையா? அப்படித் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. ஒருவேளை தெரிவித்திருந்தால், முதலமைச்சர் ஏன் 116 நாள்களாக இன்றுவரை வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்? சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்துக் கேள்வி கேட்டால், அந்தச் சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு முதலமைச்சரைப் பார்த்து, "நீங்கள் மட்டும் ஒழுங்கா?" என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம் முதலமைச்சருக்கு இருக்கலாம். அதனால்கூட அவர் கேட்காமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
தவெக ஐடி விங்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், " தனது கட்சியின் ஐடி விங் நிர்வாகியைக் காப்பாற்றிட துடியாய்த் துடிக்கும் ரீப்போஸ்ட்நிதி!
கள்ளக்குறிச்சியில் ஐடி விங் நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினால், மூன்று மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண் மீது எங்களது பாலியல் விங் நிர்வாகி புகார் அளித்துள்ளார் என்று எவ்விதக் கூச்சமுமின்றிப் பச்சைப் பொய்யைக் கூறியிருக்கிறார் ரீப்போஸ்ட்நிதி!
ஆனால், பத்திரிகை ஒன்றில், "22.10.2026 தேதியிட்ட புகார் கடிதம் வெளியானது" என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக முட்டுக்கொடுக்கிறார் ஆபாசநிதி.
தன் மீது தவறில்லை என்றால், பாலியல் விங் நிர்வாகி ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்ற கேள்விக்கு, நடுநிசியில் ரீப்போஸ்ட் செய்யும் பழக்கமுள்ள ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?
தலைமறைவாக இருக்கும் அந்தப் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது, அவருக்கு முனைப்புடன் முட்டுக்கொடுக்கும் ரீப்போஸ்ட்நிதிக்குத் தெரியுமா?" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
