மாணிக்கம் தாகூர், இப்போ கார்த்தி.. தவெக-வின் தவறுகளுக்கு முட்டுக் கொடுப்பதுதான் காங்கிரஸின் அரசியலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வை காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா?" என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆட்சியர் மேலிட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவெக அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

BJP Vanathi Srinivasan

இந்தசூழலில் தான் தற்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஆட்சியர் தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு காவல்துறை தரப்பில் சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்யவேண்டிய அவசியமில்லை என கருத்து தெரிவித்துள்ளார். எல்லா விஷயத்திற்கும் கைது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நமது நீதித்துறை அமைப்பில் தேவையில்லாமல் கைது நடக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம் எனப் பேசியிருந்தார். "மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை எம்.எல்.ஏ. அவர். செய்தியாளர்கள் சந்திப்பில்கூட, பாவமாக எனது போனைப் பாருங்கள், சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள் என்று கூறுகிறார். அவர் மீது ஊடக விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர், தவெகவினரின் தவறுகளுக்கு எல்லாம் முட்டுக் கொடுப்பதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கூட்டணிக்காக நீதி பலிகடாவா? தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!

ஏற்கனவே மாணிக்கம் தாகூர் முன்னதாக ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வை காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல!

கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும். ஆனால், புகாரின் தீவிரத்தைச் சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவர் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கு முதலில் மதிப்பளித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றத் துடிப்பதை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள் கார்த்தி சிதம்பரம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+