கள்ளக்குறிச்சி TVK எம்.எல்.ஏ வழக்கு: உதயநிதி பேட்டி வீடியோக்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேட்டி அளித்த வீடியோவை நீக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐஏஎஸ் அதிகாரி விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தவறான கருத்தை கூறியதாக தமிழக அரசு முறையிட்ட நிலையில், வீடியோவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் கூறி, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்
மாவட்ட ஆட்சியருக்கு தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், சமூக வலைதளங்களில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகை, ஊடகங்களுக்கு தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
உதயநிதி பேட்டியை நீக்க உத்தரவு
மேலும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, தவறான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டு வருவதாக புகார் தெரிவித்து முறையிட்டார்.
இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முன்னதாக இன்று காலை, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல் 6 மாதம் புதிய ஆட்சிக்கு 'ஹனிமூன் பீரியட்' என்பார்கள். இந்த ஆட்சியில் உள்ள அனைவரும் அதை அப்படியே புரிந்து கொண்டனர் போல. ஜூலை 31-ல் சம்பவம் நடந்துள்ளது. அப்போதே தலைமைச் செயலரிடம் பாதிக்கப்பட்ட ஆட்சியரும் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவரோ வேறு மாவட்டத்துக்கு மாறுதல் வாங்கிச் செல்ல சொல்லியிருக்கிறார்.
தலைமைச் செயலர் பற்றி
116 நாட்கள் கடந்து தான் இச்சம்பவத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர். அப்படியென்றால் அதுவரை முதல்வர் தூங்கிக் கொண்டிருந்தாரா? இதற்கிடையே தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் இணையவெளியில் பாதிக்கப்பட்ட நபரையே தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று நான் டிஜிபியிடம் கொடுத்த புகாரில், மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் சமரசம் பேசியிருக்கிறார். அதனால் அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளேன். தலைமைச் செயலர், ஆட்சியர் புகார் குறித்து முதல்வரிடம் சொன்னாரா இல்லையா? அப்படிச் சொல்லியிருந்தால் முதல்வர் ஏன் 116 நாட்கள் அமைதியாக இருக்கிறார்?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.




Click it and Unblock the Notifications
