காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவர் பியூஷ் சிங்! யார் இந்த 2000 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி?
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஆணையத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த எஸ்.கே. ஹல்தார் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று நடைபெற்ற ஆணையத்தின் 62வது கூட்டத்தில் அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முடிவுகளை காவிரி மேலாண்மை ஆணையம் தான் எடுத்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக எஸ்.கே. ஹல்தார் இருந்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற நிலையில், இப்போது புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
புதிய தலைவராக பியூஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வதனாரே பங்கேற்றார். அப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் சிங்குக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

யார் இந்த பியூஷ் சிங்?
பியூஷ் சிங், மகாராஷ்டிரா மாநில கேடாரை சேர்ந்த 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீர்வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையில் தேசிய நீர் இயக்கத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
டெல்லி ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் பட்டம் பெற்றவர். இதற்கு முன்பு மத்திய மின்சார அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், டெல்லி அரசின் எரிசக்தி துறையில் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிராவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அவர் தான் இப்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம்
தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்டகாலமாக நீடித்து வந்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பையும், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்தவும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீரின் இருப்பு, அணைகளின் நீர்மட்டம், நீர் திறப்பு ஆகியவற்றைக் கண்காணித்து, மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீடு முறையாக நடைபெறுவதை உறுதி செய்வது இந்த ஆணையத்தின் முக்கிய பணியாகும்.



Click it and Unblock the Notifications
