"48 மணிநேரம் எரியும்".. உச்சி பிள்ளையார் தீபத்தை திருப்பரங்குன்றம் தூணில் ஏற்ற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
டெல்லி: ''கார்த்திகை தீப நாள் முடிந்தாலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும். நேற்று உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் குறைந்தது 48 மணிநேரம் வரை தொடர்ந்து எரியும். எனவே, நீதிமன்றத்தின் நவம்பர் 20ம் தேதியிட்ட உத்தரவின்படி அதே தீபத்தை பயன்படுத்தியோ அல்லது புதிய ஏற்பாடு செய்தோ 'தீபத்தூண்' பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’’ என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு நேற்று செயல்படுத்தப்படவில்லை. வழக்கம்போல் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூணில்' கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத நிலையில் கார்த்திகேயன் அழகர்சாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வழக்கறிஞர் ஏகே சுக்லா என்பவர் வழியாக தாக்கல் செய்யப்பட்டது.
புதிய மனுவில் கூறப்பட்டுள்ளதாது: ''கார்த்திகை நாளில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் கூறிய மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முந்தைய சட்ட நடவடிக்கையின்போது எதிலும் தலையிடாத அறங்காவலர் குழுவை தமிழக அரசு காரணம் காட்டி உள்ளது. அறங்காவலர் குழுவினரின் மலை உச்சியில் உள்ள தூணிற்கு பதில் வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோவில் மீது ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் செய்துள்ளதாக கூறி உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக கடைசி நேரத்தில் இத்தகைய தீர்மானத்தை கொண்டு வந்திருப்பது வியப்பளிக்கிறது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் ஒரு வெளிப்படையான முயற்சியாகும்.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதற்காக அரசு நேர்மையற்ற தந்திரங்களை கையாண்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதேபோல் கார்த்திகை பண்டிகை நாள் கடந்துவிட்டது என்பதற்காக மட்டும் தீபம் ஏற்றுவதை அதிகாரிகள் மறுக்க முடியாது.
இதனால் நேற்று உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் குறைந்தது 48 மணிநேரம் வரை தொடர்ந்து எரியும். எனவே, நீதிமன்றத்தின் நவம்பர் 20ம் தேதியிட்ட உத்தரவின்படி அதே தீபத்தை பயன்படுத்தியோ அல்லது புதிய ஏற்பாடு செய்தோ 'தீபத்தூண்' பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்'' என்றார்.
இந்த மனு பற்றி வழக்கின் மூல மனுதாரராக உள்ள ராம ரவிக்குமாரின் வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார்.
அப்போது வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ''இந்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த மனு முக்கியமான நிவாரணத்தை கோருகிறது. வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது'' என்றார். இதையடுத்து நீதிபதிகள் ''நாங்கள் பார்க்கிறோம்'' என்றார்.
இருப்பினும் இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வருமா? இல்லையா? என்பது பற்றி இன்னும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
