கிருஷ்ணகிரி பஸ் பின்சீட்டில் யார் பாருங்க.. ஜாலிக்காக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி செய்த காரியம்
கிருஷ்ணகிரி: தனியார் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நகைகளைப் பறிகொடுத்த பெண்ணுக்கு, போலீசார் மூலம் இப்போது நகைகள் மீண்டும் கிடைத்துள்ளன. ஆனால், இந்த திருட்டில் சிக்கிய பெண் குறித்த தகவல்தான் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி, மீண்டும் அதே குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யார் தெரியுமா?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் மல்லிகா (66). கடந்த 19-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனது சகோதரி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார்.

இதற்காக நாட்றம்பள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்ஸில் ஏறியுள்ளார். பிறகு பர்கூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் தொகரப்பள்ளியில் உள்ள தனது சகோதரி ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அங்கு சென்ற பிறகுதான் மல்லிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பர்ஸில் வைத்திருந்த பர்ஸ் மற்றும் எட்டரை பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன.
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டு
இதனால் அதிர்ந்து போன மல்லிகா, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மல்லிகா பயணம் செய்த தனியார் பேருந்து மற்றும் பர்கூர் பஸ் ஸ்டாண்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மல்லிகாவின் பின்புற சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண், மல்லிகாவுடன் பர்கூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும், அங்கிருந்து ஆட்டோவில் சென்றதும் கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் தேடி வந்தனர். கடந்த 22-ம் தேதி பிற்பகல் பர்கூர் - வாணியம்பாடி கூட்ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவி பாரதி
அப்போது போலீசாரைப் பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்... அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் மல்லிகாவிடம் இருந்து எட்டரை பவுன் நகைகளைத் திருடியதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்..
விசாரணையில் அவர் ஆம்பூர் அருகே உள்ள நரியம்பட்டைச் சேர்ந்த பாரதி (57) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாரதியிடம் இருந்து திருடப்பட்ட எட்டரை பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த பாரதி யார் தெரியுமா?
கடந்த வருடம் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு அரசு பஸ்ஸில் வரலட்சுமி என்பவர் வந்து கொண்டிருந்தார். இவரது பர்ஸிலிருந்து 5 சவரன் நகைகள் திருடு போய்விட்டன.. இதனால் புகார் அளிக்கவும், போலீசில் உடனே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரான பாரதி என்பவர்தான் இந்த நகையை திருடியது உறுதியானது.
நகை திருட்டு சம்பவத்தைவிட, பாரதி அப்போது தந்த வாக்குமூலம்தான் பெரும் பரபரப்பை தந்துவிட்டன.. போலீசாரிடம் பாரதி சொல்லும்போது, "ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் நகை திருடுவது எப்போதுமே எனக்கு சந்தோஷம்.. 15 வருடங்களாகவே திருடி வருகிறேன்.. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசி நகை பறித்திருக்கிறேன்.
மீண்டும் சிக்கிய பெண்
நகையை திருடியதும் அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்கி விடுவேன்.. உடனே பணம் மற்றும் நகைகளை விற்று விடுவேன்.. இந்த பணத்தில் எனது சொந்த ஊரான நரியம்பட்டு பகுதியில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகம் ஒன்றை கட்டியுள்ளேன். அதன் மூலமும் மாத மாதம் ஆயிரக்கணக்கில் வாடகை வருகிறது.
ஊராட்சி மன்ற தலைவி நகை திருட்டில் ஈடுபடக் கூடாது என எனது குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும், நான் கேட்கவில்லை. பணம், வசதி, பதவி என எல்லாமே எனக்கு கிடைத்தும்கூட, ஜாலிக்காக திருட்டில் ஈடுபட்டேன். திருட கூடாது என்று என் மனம் நினைத்தாலும் நகைகளை பார்த்ததும் எப்படியாவது திருட வேண்டும் என்று நினைத்து, அதை திருடிவிடுவேன்" என்றெல்லாம் கூறி அதிர வைத்தது நினைவிருக்கலாம்.. இப்போது மீண்டும் சிக்கயிருக்கிறார் பாரதி.!!




Click it and Unblock the Notifications
