கிருஷ்ணகிரி NH-44-ல் 25 இடங்களில் AI கேமராக்கள்! ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரை வாகன ஓட்டிகள் உஷார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கார், பைக் அல்லது லாரியில் செல்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது அவ்வளவு எளிதாக இருக்காது.. ஏன் தெரியுமா? நீங்கள் தலைக்கு ஹெல்மெட் போடாமல் சென்றாலும் சரி, ஸ்பீடாக சென்றாலும் சரி, அங்குள்ள கேமராவில் பதிவாகிவிடும்.. இதுக்காகவே 25 இடங்களில் புதிய ஏஐ கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதாம்.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் 25 இடங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரை
இந்த பணிகள் முடிந்ததும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் முதல் காவேரிப்பட்டணம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் புதிய கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.
காரணம், இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.. குறிப்பாக கர்நாடகா, தமிழகம் இடையே செல்லும் வாகனங்களுக்கு இந்தச் சாலை முக்கியமான வழித்தடமாக உள்ளது.
இந்த வழியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிய 25 இடங்களில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
என்னென்ன விதிமீறல்கள்
இந்தக் கேமராக்கள் சாலையில் செல்லும் வாகனங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களைக் கண்டறியும்.
அதேபோல எதிர்திசையில் வாகனம் ஓட்டுவது, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்வது, ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களை முந்துவது போன்ற செயல்களையும் கண்காணிக்க முடியும்.
வீட்டுக்கே வரும் இ-செலான் அபராதம்
இந்த கேமராக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளன. இதனால் சாலையின் பல பகுதிகளில் நடக்கும் விதிமீறல்களை, இந்த கன்ட்ரோல் ரூமிலிருந்தபடியே போலீசாரால் கண்காணிக்க முடியும்.
யாராவது ஒருவர் டிராபிக் ரூல்ஸை மீறுவது கேமராவில் பதிவானால், அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு விதிமீறலை கண்டறிந்து ஆன்லைன் வழியாக இ-செலான் அபராதம் விதிக்கப்படும், இதனால் ஒவ்வொரு முறையும் போக்குவரத்து போலீசார் சாலையில் நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டிய அவசியமும் குறையும்.
25 இடங்களில் ஏஐ கேமரா
இப்போது 25 இடங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய கண்காணிப்பு முறை பயன்பாட்டுக்கு வரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை போலீசார் இல்லாத இடங்களில் விதிகளை மீறினால் அபராதத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று சில வாகன ஓட்டிகள் நினைத்திருக்கலாம். ஆனால், இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அப்படி நினைக்க முடியாது. ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் போடுவது, டிமிட்டட் ஸ்பீடில் ஓட்டுவது, சரியான பாதையில் செல்வது என அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கம் அபராதம் விதிப்பது மட்டுமல்ல. போக்குவரத்து விதிமீறல்களைக் குறைத்து சாலை விபத்துகளை தடுப்பதும்தான். குறிப்பாக தினமும் இந்த வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இனி கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டியிருக்கும்...!!


Click it and Unblock the Notifications
