ராகி களியால் கணவனின் கதையை முடித்தது ஏன்? கிருஷ்ணகிரி மனைவி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேலாளம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ் சாவில் திடீர் திருப்பமாக மனைவி கைதாகி உள்ளார். கணவன் சாப்பிட்ட ராகி களியில் மாத்திரையை கலந்து கொடுத்து அவரது மனைவியே கொலை செய்தது அம்பலமாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேலாளம் கிராமத்தில் 35 வயதாகும் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முனிரத்னாவுக்கு 32 வயது ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். முனிரத்னா தளி அருகே உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சாவில் சந்தேகம்
கடந்த நவம்பர் 14-ந் தேதி காலை மகேஷ் வயிற்று வலியால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு அவர் திடீரென இறந்துவிட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தளி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேசின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
பிரேதப் பரிசோதனை
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மகேஷ் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் தளி இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மகேஷின் மனைவி முனிரத்னாவிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது கணவரை விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் முனிரத்னாவை கைது செய்தனர்.
வாக்குமூலம்
முனிரத்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறிய தகவல்களை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி முனிரத்னாவின் கணவர் மகேஷ் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவாராம். வீட்டு செலவிற்குகூட பணம் கொடுக்காமல் முனிரத்னா சம்பாதித்த பணத்தையும் வாங்கி மதுகுடித்து விட்டு வருவாராம். அதை தட்டிக்கேட்ட முனிரத்னாவை அடித்து துன்புறுத்தினாராம்.
ராகி களியில் மாத்திரை
இதனால் கணவரை கொல்ல திட்டமிட்ட முனிரத்னா, சம்பவத்தன்று இரவு ராகி களியில் தானியங்கள் கெடாமல் இருக்க பயன்படுத்தும் மாத்திரைகளை கரைத்து கலந்து கணவர் மகேசுக்கு சாப்பிட கொடுத்தாராம். இதனால் தன் கணவர் வீட்டில் இறந்து விடுவார் என நினைத்து வேலைக்கு சென்றுவிட்டாராம். பின்னர் கணவரை மருத்துவமனையில் சேர்த்துள்ள தகவல் அறிந்து அங்கு சென்றுள்ளாராம்.
வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி
சிகிச்சையில் மகேஷ் காப்பாற்றப்பட்டால் உணவில் விஷம் கலந்தது தெரிந்துவிடும் என்பதை அறிந்த முனிரத்னா, சிகிச்சைக்கு பணம் இல்லை என கூறி கணவர் மகேசை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் கணவர் இறந்து விட்டார். ஆனால் பிரேதப் பரிசோதனையில் உணவில் விஷம் கலந்தது தெரியவந்ததால் போலீசில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த தகவலை போலீசார் தெரவித்தனர். கைதான முனிரத்னாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.




Click it and Unblock the Notifications
