தவெக அரசுக்கு நீதிமன்றங்களில் அடுத்தடுத்து பின்னடைவு.. சட்ட ஆலோசனையில் கோட்டை விடுகிறதா அரசு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்மைக் காலமாகப் பல்வேறு வழக்குகளில் தவெக அரசு பின்னடைவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இன்று ஒரே நாளில் மேகதாது தொடங்கி திருப்பரங்குன்றம் வரை நான்கு வழக்குகளில் தவெக அரசு எதிர்கொண்ட சவால்கள் கவனத்தைப் பெற்றுள்ளன. அரசுக்கு வழங்கப்படும் சட்ட ஆலோசனைகள் மற்றும் வழக்குகளைத் தவெக அரசு கையாளும் விதம் சரியாக உள்ளதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மேகதாது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது எனத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஒத்திவைக்குமாறு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்ததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

TVK

மூத்த வழக்கறிஞர் ஆஜராக முடியாததால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, "கடந்த முறையும் இதேபோலத்தான் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்தீர்கள். தற்போதும் அதையே கேட்கிறீர்கள். இதெல்லாம் முடிந்து போன வழக்கு. இதுபோன்ற வழக்குகளால்தான் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன" என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

அதேபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் தொடங்கி திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு, தமிழகத் தலைமைச் செயலாளர் வரை மாநில அரசின் நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கையில், இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குக் கோயில் நிர்வாகிகள் யாரையும் நியமிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் தான் எடுத்ததாகக் குறிப்பிட்டு முறையான மன்னிப்புக் கோரியுள்ள அவர், உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாகக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயற்சித்துள்ளார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் உள்ள ஆட்சியர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அவரது அதிகாரங்கள் மிகவும் விரிவானவை; அவரது கைகள் மிக நீளமானவை.

முதற்கட்ட அறிக்கையும் மன்னிப்பும் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை அதில் உள்ள விவரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியிருப்பதால், இக்கட்டத்தில் முதற்கட்ட அறிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை.

ஆட்சியரின் நிலைப்பாடு, 'நீ செத்தது போல நடி, நான் அழுவது போலப் பாசாங்கு செய்கிறேன்' என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது என்று கூறினால் போதுமானது. நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது எங்களுக்குக் கடுமையான வேதனையை அளிக்கிறது.

இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அது அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவுகள் இப்படி மெத்தனமாகக் கையாளப்படும்போது, நாங்கள் அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.

தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நாங்கள் முதலில் தெரிவிக்க விரும்பும் வார்த்தை 'ஐயோ' என்பதுதான். தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இந்த வார்த்தை இருக்கும். மிகுந்த வேதனையுடனும் மனத்துயரத்துடனும் இதனைத் தெரிவிக்கிறோம்.

இந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வேண்டுமென்றே, அப்பட்டமாக மீறியிருப்பது வெளிப்படுகிறது. இரண்டாவதாக, இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியையும், உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைத் துணிச்சலாகப் புறக்கணித்ததையும் இது காட்டுகிறது.

இதையடுத்து, தமிழகத் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது.

இடைத்தேர்தல் வழக்குகள்: தவெகவுக்கு மேலும் சவால்கள்

முன்னதாக, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீக்கி, தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேநேரம், திருச்சி கிழக்கு, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை தொடர்கிறது.

இதற்கிடையே, பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை முதல்வர் விஜய் எதிர்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மானாமதுரை தொகுதி தவெக வேட்பாளரும் தேர்தல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தக் கடைசி இரண்டு வழக்குகளும் பெரிய பிரச்சினையாகக் கருதப்பட வேண்டியவை அல்ல. யார் எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும், அவர்களின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்குகள் தொடரப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: உயர் நீதிமன்றம் கேள்வி

அதேநேரம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்திலும் நீதிமன்றம் அண்மையில் கடுமையாகக் கண்டித்தது.

கடந்த ஜூலை மாதமே பெண் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகும், பல மாதங்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை வந்திருக்காது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறினார். மேலும், விசாரணை அதிகாரியை நியமித்து உத்தரவிட்டார்.

அதிமுக பிரமுகர் வழக்கு: தவெக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

முன்னதாக, மதுரையில் அதிமுக பிரமுகர் தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மறுநாள் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் அனுப்பிவிட்டு, அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட பி.எம். மன்னனைச் சிறையில் அடைக்க மறுத்ததுடன், தவெக அரசையும் நீதிமன்றம் கண்டித்தது.

இப்படி பல்வேறு வழக்குகளில் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தற்போது தவெக அரசின் சட்டத்துறை செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முக்கியமான வழக்குகளில் அரசுத் தரப்பு முன்கூட்டியே போதிய சட்டத் தயாரிப்புகளை மேற்கொள்கிறதா? மூத்த வழக்கறிஞர்களுடன் உரிய ஆலோசனைகள் நடத்தப்படுகின்றனவா? நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் அரசு நிர்வாகம் போதிய கவனம் செலுத்துகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அரசுக்கு வலுவான சட்ட ஆலோசனைக் கட்டமைப்பு இருப்பது அவசியம். அடுத்தடுத்து நீதிமன்றங்களில் எழும் கேள்விகளுக்கு தமிழக அரசு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதுதான் இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+