மதுரையை சுற்றி எதற்கு இத்தனை சுங்கச்சாவடிகள்? அத்தனையும் மூட உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
மதுரை: மதுரையை சுற்றி வளையங்குளம்-கப்பலூர், சிந்தாமணி-பாரப்பத்தி, மாட்டுத்தாவணி-சிட்டம்பட்டி, மாட்டுத்தாவணி-பாரப்பத்தி மற்றும் மாட்டுத்தாவணி-கப்பலூர் என பல்வேறு சுங்கச்சாவடிகள் உள்ளன. இதுபற்றி பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள். இத்தனை சுங்கச்சாவடிகள் ஏன் என்றும், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என்றால் அத்தனையையும் மூட உத்தரவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சுங்கச்சாவடிகள் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்தமிழகத்தின் பிரதான நகரங்களில் மதுரை முக்கியமான இடத்தில் இருக்கிறது. மதுரை மாநகர மக்கள் மட்டுமின்றி மேலூர், நத்தம், வாடிப்பட்டி, திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை, கல்வி, வணிகம், அரசு அலுவலகங்களுக்காக தினமும் மதுரை மாநகருக்கு வந்து செல்கிறார்கள்.
இதற்காக மதுரையை சுற்றிலும் பல்வேறு இணைப்பு சாலைகள் உள்ளன. ஆனால் இந்த சாலைகள் மற்றும் அதனையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள், கட்டண வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மாட்டுத்தாவணி, சிட்டம்பட்டி, பாரப்பத்தி, கப்பலூர், கொடை ரோடு, பரளிபுதூர், நத்தம்பட்டி, தாமரைப்பட்டி, வலசை, சிந்தாமணி, வளையங்குளம், வண்டியூர் மற்றும் மேலூர் பகுதியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில சுங்கச்சாவடிகள் மிக குறுகிய இடைவெளியில் அமைந்து உள்ளன. வளையங்குளம்-கப்பலூர், சிந்தாமணி-பாரப்பத்தி, மாட்டுத்தாவணி-சிட்டம்பட்டி, மாட்டுத்தாவணி-பாரப்பத்தி மற்றும் மாட்டுத்தாவணி-கப்பலூர் ஆகியவற்றுக்கு இடையில் மிக குறைவான தூரங்களே உள்ளன. இதனால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வாகனங்களில் எந்த பகுதியில் சென்றாலும் சுங்கக்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். எனவே மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சுங்கக்கட்டண வசூல் மையங்களை குறைப்பதற்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எதற்காக மதுரையை சுற்றிலும் இத்தனை சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன? இதுகுறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதிக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் மதுரையை சுற்றி இருக்கும் அத்தனை சுங்கச்சாவடிகளையும் மூட உத்தரவிடுவோம் என எச்சரித்தனர். பின்னர் விசாரணையை வருகிற டிசம்பர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Click it and Unblock the Notifications
