மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி சுங்கச்சாவடி இடம் மாறுமா? ஐகோர்ட் நோட்டீஸ்
விருதுநகர்: மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும்படி ஏற்கனவே இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. எனவே அந்த சுங்கச்சாவடி தொடர்பான மனு விவரங்களை நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
மதுரை உயர்நீதிமன்ற மூத்த வக்கீல் டி.எஸ்.ஆர்.வெங்கட்ரமணா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், மதுரை-தென்காசி இடையே 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நத்தம்பட்டியில் வாகன சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடியானது, கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு முரணாக உள்ளது.

தென்காசி, கடையநல்லூர், சிவகிரியில் இருந்து வரும் வாகனங்களுக்கும், மதுரையில் இருந்து செல்லும் வாகனங்களுக்கும் நத்தம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம். எனவே அங்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இந்த சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும். அதேபோல விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டு உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும்படி ஏற்கனவே இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. எனவே அந்த சுங்கச்சாவடி தொடர்பான மனு விவரங்களை நீக்க வேண்டும். நத்தம்பட்டி சுங்கச்சாவடிக்கு எதிரான மனுதாரரின் புகார் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உண்மையில் என்ன பிரச்சனை
தென்காசி அல்லது கடையநல்லூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் மக்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி சுங்கச்சாவடியைக் கடக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல் மதுரை புறநகரில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியையும் கடக்க வேண்டிய நிலை வரும். எனவே வெறும் 33 கிமீ தூரத்திற்கு இரண்டு முறை சுங்கக்சாவடிக்குகட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார மக்களுக்குமே இந்த சுங்கச்சாவடியை கடுமையாக எதிர்க்கிறார்கள்.




Click it and Unblock the Notifications
