மதுரை ஆட்சியர் Vs ஏஎஸ்ஐ.. பெரிய முரண்பாடு.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் புதிய திருப்பம்?
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஸ்தானிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களைவிட, இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) முன்வைக்கப்போகும் விளக்கம் மிக முக்கியமானதாக இருக்க போகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கத்திற்கு மாறாக ஏஎஸ்ஐ எனப்படும் தொல்லியல் துறை கருத்து தெரிவித்தால் என்ன ஆகும் என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில் ASI-யின் பங்கு என்ன என்பது விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது "பொதுமக்கள் பாதுகாப்பு, தீ தடுப்பு, தொல்லியல் பாதுகாப்பு மற்றும் அமைதிப் பராமரிப்பு ஆகியவற்றின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, மாவட்ட நிர்வாகம் நிகழ்ச்சியின் நேரம், அணுகல் பாதை, கால அளவு மற்றும் பிற தற்செயலான ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும். நிகழ்ச்சி முடிந்தவுடன், அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் எந்தவொரு தற்காலிகப் பொருளையும் அல்லது கட்டமைப்பையும் விட்டுச் செல்லாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு
நினைவுச்சின்னம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொருத்தமான நிபந்தனைகளை இந்தியத் தொல்லியல் துறை விதிக்கும். பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இந்நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். எந்தவொரு நினைவுச்சின்னம், மத ரீதியான கட்டமைப்பு அல்லது சொத்துக்களுக்கு அகழ்வாராய்ச்சி செய்வதற்கோ, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கோ, கட்டமைப்பில் மாற்றம் செய்வதற்கோ, நிரந்தரக் கட்டுமானங்களை அமைப்பதற்கோ அல்லது சேதம் விளைவிப்பதற்கோ அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது..
தொல்லியல் துறை அதிகாரிகள்
ஆனால் நவம்பர் 24ஆம் தேதி காலை 9.30 மணி முதலே, ASI பார்வையாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் மலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், கோயில் செயல் அலுவலர் (EO), தொல்லியல் துறை (ASI), காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, நிகழ்வுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை ஆட்சியர் அறிக்கை
உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையில், "24.11.2026 அன்று காலை சுமார் 9.30 மணியளவில், நான் காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசித்தேன். அதன்பிறகு, காவல் ஆணையருடன் இணைந்து திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, சுமார் 1½ முதல் 2 மணி நேரம், அதாவது மதியம் 12.30 மணி வரை அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன்.
அதிகாரிகள் எங்கே இருந்தார்கள்
கூட்டக் குறிப்புகளின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரிகளான திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் (வருவாய் பார்வையாளர்), காவல் உதவி ஆணையர் (காவல் பார்வையாளர்), இந்தியத் தொல்லியல் துறை (ASI) பார்வையாளர்கள் மற்றும் நிர்வாக நடுவர்கள் ஆகியோர் தத்தமது இடங்களில் பணியில் இருந்ததை நான் உறுதி செய்தேன்; தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே மலை மீது நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் நாள் முழுவதும் அங்கேயே தங்கியிருக்குமாறு நியமிக்கப்பட்டிருந்தார். கூட்டக் குறிப்புகளின்படி ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கடமைகளை நிறைவேற்றினேன்
24.11.2026 அன்று காலை 10.08 மணிக்கு, முன்னேற்பாட்டுக் குழு மலைக்குச் செல்லாததால், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதில், அந்தக் குழுவை உடனடியாக மலைக்கு அனுப்புமாறும், அதுவரை ஏன் அனுப்பப்படவில்லை என்பதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக விளக்குமாறும் அவருக்கு உத்தரவிட்டேன். காலை 11.30 மணிக்கு, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் 24.11.2026 தேதியிட்ட Rc. No. 810/2026 என்ற எண் கொண்ட இரண்டு கடிதங்களை மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பினார், அதனுடன் "14(i), 14(ii), 14(iv) மற்றும் 18 ஆகிய பத்திகளின்கீழ் எனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நான் முறையாக நிறைவேற்றியுள்ளேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்ல வேண்டிய பாதை
இதற்காக மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் மூன்றாவது கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவின் ஒவ்வொரு வழிகாட்டுதலும் தனித்தனியாக எடுத்துக்கொள்ளப்பட்டு விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தீபம் ஏற்றும் நிகழ்வுக்கான குழுவின் அமைப்பு மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, நேரம், செல்ல வேண்டிய பாதை, நிகழ்வின் கால அளவு, அனுமதிச் சீட்டு வழங்கும் முறை, பார்வையாளர்கள் மற்றும் இதர அனைத்து முன்னேற்பாடுகளும் கோயில் செயல் அலுவலர் (EO), இந்தியத் தொல்லியல் துறை (ASI), காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து இறுதி செய்யப்பட்டன.
அதிகாரிகள் கையெழுத்து
மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, அதில் பங்கேற்ற அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டன. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, அவற்றைத் தவறாமல் நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது." இவ்வாறு மதுரை ஆட்சியர் கூறியிருந்தார்
முரண் தகவல்
ஆனால், நவம்பர் 24ஆம் தேதி பிற்பகல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ASI அளித்த விளக்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் விளக்கத்திற்கு முரணாக இருந்தது.
தொல்லியதுறை மாறுபட்ட விளக்கம்
அப்போது ASI தரப்பில், "இந்த நிமிடம் வரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எங்களது அதிகாரிகள் தூண் அருகே செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கைக்கும், உயர் நீதிமன்றத்தில் ASI அளித்த விளக்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முக்கியத்துவம் பெறக்கூடும். தொல்லியல் துறை அளிக்க போகும் விளக்கம் தான் இப்போது கூடுதல் முக்கியத்தும் பெற போகிறது.


Click it and Unblock the Notifications
